கோவை: புகார் வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதில் நம் கோவை மாநகர போலீசார் தான் மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளனர். இதனால் நகரின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது.
கோவை மாநகர எல்லைக்கு உட்பட்டு காட்டூர், உக்கடம், சிங்காநல்லூர் என மொத்தம் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில், புதிதாக சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை ஆகிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டிற்குள் இருந்த துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் மாநகர காவல் துறையுடன் இணைக்கப்பட்டன.
தற்போது மாநகரில் 20 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன; இவை தவிர 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் 2 போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை புறநகரில் 33 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பிரச்னைகள் எழும்போது இந்த காவல் நிலையங்களுக்குச் சென்று பொதுமக்கள் புகார்கள் அளிக்கின்றனர்.

இதனிடையே ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அவசர உதவி எண் 100க்கு வரும் அழைப்புகளின் பேரில், சம்பவ இடத்திற்கு எந்த போலீசார் விரைவாகச் செல்கின்றனர் என்ற ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்திற்குச் செல்வதில் தமிழ்நாட்டிலேயே கோவை மாநகர போலீசார் முதலிடத்தில் உள்ளனர். சராசரியாக இவர்கள் 11.35 நிமிடங்களுக்குள்ளாக உதவிக்காக சென்றடைகின்றனர்.
கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர் போலீசார் 13 நிமிடங்களிலும், சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் 17 நிமிடங்களிலும், சேலம் போலீசார் 21 நிமிடங்களிலும் சம்பவ இடத்திற்குச் செல்கின்றனர்.
மேம்பட்ட பாதுகாப்பு

கோவையில் இதற்கு முன்பு சம்பவ இடத்திற்கு போலீசார் செல்ல 30 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக்கொண்ட நிலையில், தற்போது GPS உதவியுடன் 15 நிமிடங்களுக்குள்ளாக போலீசார் சென்றுவிடுவதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
தற்போது கோவை மாநகரில் 24 நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் GPS வசதி உள்ள நிலையில், மேலும், 29 பைக்குகளிலும் இந்த வசதியைக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த நடவடிக்கையால் மாநகரின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.