கோவையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு- வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் சாலையில் சென்று கொண்டிருந்த டாக்சி கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சின்ன தடாகம் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் செல்வராஜ் (55).

இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்து, அதனை டாக்சியாக ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பன்னிமடையில் இருந்து தடாகம் நோக்கி தனது டாக்சியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, வரப்பாளையம் பிரிவு அருகே டாக்சி கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி அருகில் வீட்டின் சுவரில் பலமாக மோதி நின்றது.

இந்த விபத்தில் காரின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில், செல்வராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் மீட்டு செல்வராஜை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தடாகம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இவரது ஆம்னி வேன் நிலை தடுமாறி சுவரில் மோதும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recent News

Latest Articles