கோவை: கோவை புலியகுளம் அருகே பள்ளி வாகனம் மோதி வாலிபர் ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியைச் சேர்ந்தவர் அக்க்ஷய் குமார் (வயது 24). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்து வந்துள்ளார், தினமும் அவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார் .
இந்த நிலையில் இன்று காலையும் வழக்கம்போல அக்க்ஷய் குமார் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அவர் புலியகுளம் அருகே ரெட்பீல்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமணை அருகே சென்றபோது திடீரென அவரது இருசக்கர வாகனம் சறுக்கியதால் அக்ஷய் குமார் கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு மாணவ மாணவிகளை ஏற்றுக் கொண்டு செல்லும் தனியார் பள்ளி வாகனம், கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே விழுந்த அக்ஷய் குமார் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார்அக்ஷய் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறுகலான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


அனைத்து பள்ளி வேன் மற்றும் பள்ளி பேருந்துகள் அதிவேகமாக செல்கிறது.