கோவை: கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குறித்த விவரங்களை ஊடகங்கள் முன்பு காவல் ஆணையர் சரவண சுந்தர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாணவி வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, இவரது சகோதரர் கார்த்திக் (எ) காளீஸ்வரன்(21), இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா(எ) தவசி(20) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் ஜாமினில் வந்துள்ளனர். போலீசாரல் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. க.க. சாவடி துடியலூர், பீளமேடு காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
இவர்கள் மரம் வெட்டுதல், லேத் ஒர்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர். சம்பவ நாளில் கோவில்பாளையம் பகுதியில் மது அருந்தியுள்ளனர். சாவியுடன் நின்றிருந்த மொபட்டை திருடிக் கொண்டு சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர்.
கோவை மாணவி வழக்கு
காரில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை அரிவாளால் தாக்கி இருட்டான பகுதிக்கு 3 பேரும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
சம்பவம் இரவு 10.40க்கு நடைபெற்றது. காயமடைந்த வாலிபர் இரவு 11.20 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிரமாக தேடினர்.
அதிகாலை 4 மணி அளவில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் மாணவி மீட்கப்பட்டார். ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதி உட்பட பல இடங்களில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை தேடியதில், மூன்று பேரும் துடியலூர் வெள்ள கிணறு பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது.
அங்கு சென்ற போலீசார் மூணு பேரையும் பிடிக்க முயன்ற போது அவர்கள் தங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் காவலர்களை தாக்கினர். அறிவாளால் வெட்டியதில் தலைமை காவலர் சந்திரசேகருக்கு(47) இடது கையில் வெட்டு விழுந்தது. போலீசார் சுட்டதில் மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
பின்னர், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 296 (b), 118, 140, 309, 80 ஆகிய சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் உதவி
கைதானவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் மோதிரம் மற்றும் ஒரு மொபைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஆபத்தான காலத்தில் போலீசாரை தொடர்பு கொள்ள காவல் உதவி ஆப் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆப்பில் sos பட்டனை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல் துறைக்கு புகார் செல்லும். லொகேஷனை கண்டறிந்து யாரேனும் ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். சம்பவ இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டாஸ்மாக் பார் மூடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் தினமும் 5 பீட் ஆபிசர், இரண்டு ரோந்து வாகனங்கள் தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். சம்பவத்திற்கு சற்று முன்பு பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து சென்றுள்ளனர்.
மாணவிகளின் பாதுகாப்புக்கு போலீஸ் அக்கா, மாணவர்களின் பாதுகாப்புக்கு போலீஸ் புரோ திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.
இவ்வாறு கமிஷனர் சரவண சுந்தர் கூறினார்.


