கோவை: கோவை மேற்கு புறவழி சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி உயிரிழந்தார். மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த மாணவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி காயமடைந்தவர்களை சந்தித்து சென்றார்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் இங்கே அதிக அளவில் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வேக கட்டுப்பாடு இன்றி வாகனங்கள் தாறுமாறாக இயக்கப்படுவது தான் விபத்துகளுக்கு காரணம் என்று காவல்துறையினரிடம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிக விபத்துக்கள் நிகழ்வதால் இங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று ஒரு கல்லூரி மாணவி உயிர் பறிபோய் இருப்பதாக ஆதங்கம் பட்ட அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக எழுப்பினர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்துள்ளனர்.

