கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர் பட்டாளத்தினர் புதிய திரைப்படத்தை இயக்குகின்றனர். இதற்கான பர்ஸ்ட் லுக் அறிமுக விழா நடைபெற்று முடிந்தது.
தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது, இந்திய சினிமா முழுவதிலும் கோவை மக்கள் சாதித்து வருகின்றனர். இதனிடையே கோவையைச் சேர்ந்த இளைஞர் பட்டாளம் புதிய படத்தை இயக்கி நடிக்க உள்ளனர்.
போத்தனூரைச் சேர்ந்தவர் தமிழ் மகன் ஜாபர். இவர் கொள்கையின் குரல் என்ற புதிய படத்தை இயக்குகிறார். கோவையை மையமாகச் சேர்ந்த சினிமா கலைஞர்கள் இணைந்து க்ரைம்-சஸ்பென்ஸ் படமாக இப்படத்தை உருவாக்கி வருகின்றனர்.
இப்படத்தின் நாயகன் சிவ ப்ரித்தம், நாயகி ஐஸ்வர்யா என படத்தின் பெரும்பாலான நடிகர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில் நடிகர் பாக்கியராஜ் இணைந்துள்ளார். மேலும், யூடியூப் புகழ் விக்னேஷ் காந்த் உள்ளிட்டோரும் படத்தில் இணைந்துள்ளனர்.
ரூ.3 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பூக்கடை ரவி தயாரிக்கிறார். வரும் ஜூலை மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
தருமபுரியில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளதாகவும், தொடர்ந்து கோவை மற்றும் சென்னையில் மீதி படப்பிடிப்பு நடத்த உள்ளதாகவும் படத்தின் தெரிவித்துள்ள இயக்குனர் தமிழ்மகன் ஜாபர், வரும் டிசம்பர் மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், கோவை மக்கள் தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.