கோவை: நள்ளிரவில் அறைக்குள் புகுந்து கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த மர்ம நபர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டி அருளானந்தர் வீதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவரது மகன் பிரின்ஸ் (19). இவர் ஈச்சனாரியில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார்.
இதற்காக ஈச்சனாரி முத்து நகரில் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு பிரின்ஸ் அவரது அறையில் படுத்து கொண்டு இருந்தார்.
துணிகரம்
அப்போது சிலர் கதவை தட்டியுள்ளனர். கதவைத் திறந்து பார்த்தபோது 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பிரின்ஸ் அறைக்குள் புகுந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிரின்சிடமிருந்து ரூ.20 ஆயிரம் மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து பிரின்ஸ் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரின்சிடம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

