கோவை: கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள காலி இடத்தில் நேற்றிரவு கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவியையும் அவரது ஆண் நண்பரையும் தாக்கிவிட்டு அந்த சம்பவம் அரங்கேறியது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் தப்பியோடி தலைமறைவாகினர்.
தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகள் 3 பேரும் கோவை துடியலூரை அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த மூன்று பேரை போலீசார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதில் சந்திரசேகர் என்ற தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மூன்று பேர் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர்கள் கீழே விழுந்தனர்.
பின்னர் அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த
குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது. 
தொடர்ந்து, காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது.
கட்டடத் தொழிலாளிகள்
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும்,
இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. 
அதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும், இவர்கள் மீதும் ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


                                    
