கோவை:பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப மாணவர்கள் 40 பிரிவுகளில் இலவச தொழில் நுட்ப இணைய பயிற்சியில் ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் கலந்து கொள்ளலாம்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த, உயர் கல்வி உதவி தொகை பெறும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படிக்கும்போது வேலை வாய்ப்பு பெறும் வகையில், 40 பிரிவுகளில் நவீன தொழில் நுட்ப இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
இதில், ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர், ஏஐ டேட்டா இன்ஜினியர், ஹார்டுவேர் இன்ஜினியர், பிட்டர், வெல்டர், எலக்ட்ரிசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட 40 பிரிவுகள் இலவசமாக அளிக்கப்பட உள்ளன.
மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தாங்கள் இருக்கும் இடத்திலேயே இந்த பயிற்சியினை ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் மூலம் பயிலலாம். பயிற்சி வகுப்பு 6 மாத காலம்.
இதற்கு https://registration.tnbocw.com/application என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

