கோவை: ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கோவையில் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவான மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூலி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.
அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைப்பில், நாகர்ஜுனா, சௌபின் ஷஹீர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அமீர்கான் நடித்து இருக்கும் இந்த படம்,
ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரையுலக சாதனையை நினைவு கூரும் வகையில் சிறப்பு தலைப்புடன் தொடங்குகிறது.

கோவை முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் இன்று காலை முதல் காட்சியிலேயே ரசிகர்கள் வெள்ளம் கூடியது. பல இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்தும், ஜமாப் அடித்து, நடனம் ஆடி கொண்டாடினர்.
முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் முன்னதாகவே முழுவதும் விற்றுப்போன நிலையில், திரையரங்குகள் முன்பு நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்து இருந்தனர்.
கூலி திரைப்படத்தின் வெளியீடு, கோவையில் திருவிழா போல கொண்டாடப்பட்டு, சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.