கோவை: தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்வதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்தில் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வருகின்ற திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை ஆனது நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக கோவையில் அதிகப்படியான வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பங்களுடனும் தனியாகவும் தங்கி வேலை செய்து வரும் நிலையில் தற்போது அவர்களில் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

ரயில்கள் மூலம் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரயில் நிலையத்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ரயில்வே போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளும் அவர்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி தொடர்ந்து அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. திருட்டு சம்பவங்களை கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் ஆனது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்றும் சொந்த ஊருக்கு செல்வதற்காக அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில் வந்த போது வட மாநில தொழிலாளர்கள் ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயற்சித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் அவர்களை வரிசைப்படுத்தி ரயிலில் ஏறுவதற்கு அனுமதித்தனர்.



