கோவையில் முக்கியமான டாப் 5 பகுதிகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் “மான்செஸ்டர்” என அழைக்கப்படும் கோவை நகரம், தொழில், கல்வி, ஐ.டி., மருத்துவம் மற்றும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது.
இதன் காரணமாக மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. அனைத்து விதமான அம்சங்களும் நிறைந்துள்ள கோவையில் நிலங்களை வாங்க மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நகரத்தில் சில பகுதிகள் உயர்ந்த வாழ்க்கைத் தரம், பிரீமியம் வீடுகள், கோடிக்கணக்கான வில்லாக்கள் மற்றும் உயர்ந்த நிலம் மதிப்புடன் “Richest Areas” என பெயர் பெற்றுள்ளன.
அவற்றில் முக்கியமான டாப் 5 பகுதிகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஆர்.எஸ்.புரம் (RS Puram)
கோவையின் இதயம் என்று சொல்லப்படும் பகுதி ஆர்.எஸ்.புரம். ரத்ன சபாபதிபுரம் தற்போது பணக்காரர்களின் கூடாரமாக மாறியுள்ளது. காரணம்
நகர மையத்தில் அமைந்துள்ள இந்த பகுதி, உயர்தர ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்கள், நகைக்கடைகள், பிரீமியம் குடியிருப்புகள் ஆகியவற்றால் பிரபலமானது.
கொங்கு தமிழ் பேசும் கோவை மக்கள் மட்டுமல்லாமல், தமிழத்தை சேர்ந்த மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வட இந்தியாவை சேர்ந்தவர்கள் இங்கு அதிகம் வசித்து வருகின்றனர்.
காரணம், வியாபார ரீதியாகவும், தொழில் ரீதியாக தஞ்சம் புகுந்தவர்கள் தற்போது முழுவதும் கொங்கு தமிழ் பேசும் மக்களாக மாறியுள்ளனர். ஆரம்பத்தில் வியாபாரத்திற்காக வந்தவர்கள், தொழில்வளம் பெருகி, தங்கள் வியாபாரத்தில் விருத்தியடைந்து தொழிலதிபர்களாகவும் மாறியுள்ளனர்.
கோவையில் மிக உயர்ந்த பகுதிகளில் ஒன்றான ஆர்எஸ் புரத்தில், பிரீமியம் அபார்ட்மெண்ட்கள் & பங்களாக்கள் உள்ளன. விலை அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் இங்கு வசிக்க கூடிய சூழல் இல்லை.
பெரும்பாலான தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களின் விருப்ப முகவரி இதுவே என்பதால் முக்கிய வணிக மையமாக செயல்பட்டு வருகிறது.
ஆர்எஸ் புரத்தில் உள்ள D.B ரோடு மையப்பகுதியில் மணிக்கூண்டு அமைத்து இரவு நேர மின்னொளியால் வெளிநாட்டு பாணியில் ஸ்மார்ட் சிட்டி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மக்கள் இதை பயன்படுத்தி வரும் சூழலில், மற்ற பகுதிகளில் உள்ளவர்களும் இங்கு ரீல்ஸ், வீடியோக்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். துரித உணவுகளுக்கும், ஆடை அங்காடிகளும் அதிகம் நிறைந்த பகுதி.
பொழுது போக்கு அம்சமாக ஏராளமான அங்காடிகள் அருகருகே உள்ளது. மேலும் மருதமலை, சிறுவாணி அணை, கோவை குற்றாலம், வெள்ளியங்கிரி, பேரூர், ஈஷா என பல்வேறு தளங்கள் அருகில் உள்ளதால் சுற்றுலா பயணிகளும் அதிகம் வருவதுண்டு.
ரேஸ் கோர்ஸ் (Race Course)
கோவையில் ஆடம்பர வாழ்க்கையை குறிக்கும் பகுதி என்றால் அது ரேஸ் கோர்ஸ். இங்கு நடைபாதை, பசுமை சூழல், உயர்தர பங்களாக்கள் என்பவை பிரபலமானவை.

காலை/மாலை வாக்கிங் ஸ்பாட், கோடிக்கணக்கான தனி வீடுகள், அமைதியான, பாதுகாப்பான சூழல் உள்ளன.
நகரின் மிக உயர்ந்த சமூகத்தினர் வசிக்கும் பகுதி. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் இந்த பகுதியும் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இளைஞர்களின் ஸ்பாட்டாக மாறியுள்ளது.

அருகில் அரசு அலுவலகங்களும், தியேட்டர்களும், மருத்துவமனைகளும், கல்வி நிலையங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், ஆட்சியர் அலுவலகம், கமிஷ்னர் என மக்கள் வசிக்க அத்தனை அம்சங்களும் உள்ளதால் இங்கு கோவை மட்டுமல்லாமல் பலதரப்பட்ட மக்களும், வணிகர்களும் வசித்து வருகின்றனர்.
சாய்பாபா காலனி
குடும்பங்களுக்கு ஏற்ற மற்றும் வசதிகள் நிறைந்த பகுதி. உயர்தர பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் உள்ளதால் அதிகம் மக்கள் விரும்பும் பகுதி.
துரித உணவுக்கு பஞ்சமில்லாத ஏரியாவில் இதுவும் ஒன்று. திரும்பும் திசையெல்லாம், உணவகங்களும், துரித உணவுக் கடைகளும் அதிகம் உள்ள இடம். ரம்மியமான சூழல் அமைந்துள்ள அழகான பகுதி.
என்எஸ்ஆர் சாலை எப்போதுமே பிஸியாக இருக்கும் பகுதி. அருகில் மருதமலை, கணுவாய், ஆனைகட்டி பகுதிகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகம். ஆனால் என்எஸ்ஆர் சாலையை தவிர்த்து மற்ற இடங்கள் அதிக மக்கள் வசிக்கும் பகுதி.
சாலையோரங்களில் இருபக்கமும் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் இளைப்பாற வைக்கும். சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்காக்களும், நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்ற இடமும் உண்டு.
சிறுவாணி குடிநீரும், அனைத்து பகுதியில் சாலை வசதியும் உள்ளதால் மக்கள் வாழ ஏற்ற இடம். நடுத்தர மக்களுக்கான வாடகை வீடுகள் அதிகம் இருந்தாலும், வாடகையும் அதிகம்தான்.
நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் பிரீமியம் வீடுகள், வணிக மற்றும் குடியிருப்பு சமநிலை கொண்ட ஏரியா.
அவிநாசி ரோடு & பீளமேடு
ஐ.டி. நிறுவனங்கள், ஸ்டார் ஹோட்டல்கள், கார்ப்பரேட் ஆபீஸ்கள் அதிகம் உள்ள முக்கிய பாதை. உயர்தர மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் உள்ளதால் மக்கள் அதிகம் நேசிக்கும் இடத்தில் இதுவும் ஒன்று.
கோவை புறநகர் பகுதிக்கு செல்ல சுலபமாக உள்ள பகுதி என்பதால், அனைத்துவிதமான கடைகளும் உண்டு. பக்கத்திலேயே ஏர்போர்டும் உள்ளதால், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் தேர்வு செய்யும் பகுதியாக உள்ளது.

தியேட்டர்கள், மால்கள், வணிக வளாகங்கள் உள்ளதால் இளசுகளின் கூட்டம் அதிகம் மொய்ப்பதுண்டு. துரித உணவுகளுக்கு இந்த ஏரியாவும் பஞ்சமில்லாத ஏரியா.
அருகில் கொடிசியா அரங்கம் உள்ளதால், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிகள் இங்கே நடப்பதுண்டு. இதனால் இந்த ஏரியாவும் வணிக பகுதியாக மாறிவிட்டது.
உயர்தர அபார்ட்மெண்ட்கள், ஐ.டி. & கார்ப்பரேட் ஊழியர்கள் வசிப்பு, விமான நிலையம் அருகாமை உள்ளதால் வேகமாக வளர்ந்து வரும் பிரீமியம் ரியல் எஸ்டேட் மண்டலம்.
சரவணம்பட்டி (Saravanampatti)
கோவையின் “IT Hub” என அழைக்கப்படும் சரவணம்பட்டி, சமீப ஆண்டுகளில் செல்வந்தர்களின் புதிய விருப்பமாக மாறியுள்ளது.
ஐ.டி. பார்க்கள் & டெக் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வில்லாக்கள் அதிகம் பெருகியுள்ளது. காலையில் வேலைக்கு சென்றால் இரவு நேரத்தில் களைத்து வீடு திரும்புவது என தங்களது வாழ்க்கை தரம் இயந்திரத்தை போல மாறியுள்ளதால் இந்த பகுதியிலும் FOOD COURT அதிகமாகிவிட்டது.
இந்த பகுதியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை ஆரம்பித்தால் கூட, இன்றைய தேதிக்க அவர்கள் தொழிலதிபர்களாக மாறக்கூடும் வாய்ப்புண்டு.
முதலீட்டிற்கு அதிக வருமான வாய்ப்பு தேடி தரும் பகுதியாக சரவணம்பட்டி உள்ளது. புதிய தலைமுறை தொழில்நுட்ப நிபுணர்கள் அதிகம் குடியேறும் பகுதி.
மருத்துவமனைகள், உயர்தர கல்லூரிகள், ஆன்மிக பகுதிகள் உள்ளதால் வளர்ந்து வரும் நகரங்களில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.
ஏன் இந்த பகுதிகள் ‘Richest’?
- உயர்ந்த நிலம் & வீட்டு விலை
- பிரீமியம் வாழ்க்கை வசதிகள்
- தொழிலதிபர்கள் & ஐ.டி. நிபுணர்கள் வசிப்பு
- பள்ளி, மருத்துவம், மால், ஹோட்டல் போன்ற முழுமையான வசதிகள்
கோவையில் வாழ மக்கள் அதிகம் விரும்புவதற்கான முக்கிய காரணம், அமைதியான சூழல், வளர்ச்சி வாய்ப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்.
குறிப்பாக ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ் போன்ற பழைய பிரீமியம் பகுதிகளும், சரவணம்பட்டி போன்ற புதிய வளர்ச்சி மண்டலங்களும் சேர்ந்து கோவையை ரியல் எஸ்டேட் முதலீட்டின் ஹாட்ஸ்பாட்டாக மாற்றியுள்ளன.



