Header Top Ad
Header Top Ad

கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின் வரலாறு!

கோவை: கோவையில் உள்ள முக்கிய கோவில்களின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து இங்கு காணலாம்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முதன்மையானதாக பார்க்கப்படுவது மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும்.

இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்தில் இருந்து சுமார் 741 மீட்டர் உயரத்தில் ஏழுநிலை கோபுரத்துடன் இந்தத் தொன்மையான திருத்தலம் அமைந்துள்ளது.

தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. கோவிலின் ராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார்.

அருகே பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம் அமைந்துள்ளன.

Advertisement

முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி உள்ளது. முருகன் கோயிலாக இருந்தாலும், வெளிமண்டபத்தில் பட்டீசுவரர், மரகதாம்பிகை சன்னிதிகளுடன் சோமாஸ்கந்தனாக உள்ளார். ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

முருகன் கோவிலுக்கு அருகே பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர் குகையும் அமைந்துள்ளது. பொதுவாக விநாயகர் அரச மரத்தடியில் தான் காட்சி தருவார். ஆனால், இங்கு அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் ஐந்து முகங்களுடன் அமைந்துள்ளார். எனவே, இவரை பஞ்ச விருட்ச விநாயகர் என்று அழைக்கின்றனர். படிக்கட்டு வழியாக கோவிலுக்கு வருபவர்கள், பஞ்ச விருட்ச விநாயகரை தாண்டி தான் சன்னதிக்கு வர முடியும்.

மருதமலை செல்லும் வழி: https://maps.app.goo.gl/3G5WE6feeMm9uWJu5

koniamman temple coimbatore

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் குறித்தும், இக்கோவில் குறித்தும் அறிந்திடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

இந்த கோவிலின் வரலாறு 13ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. 7 நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்தை கடந்து செல்லும் போது, 3 நிலை கோபுரம் உள்ளது. இந்த ஆலயத்தில் கோனியம்மன் வடக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

வலது காலை மடித்தபடியும், இடது காலை தொங்க விட்டு அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறார். அதேபோல, இடது காலில் அரக்கனை மிதித்தபடி அம்மன் இருக்கிறார்.

கழுத்தில் ஆரம் அணிந்திருக்கும் அம்பிகை, உடுக்கை, சூலம், சங்கம், வாள், அக்னி, சக்ரம், மணி, கபாலம் ஆகியவற்றை ஏந்தியவாறு 8 கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

சிவனைப் போன்று வலது காதில் குண்டலம், இடது காதில் தோடு அணிந்திருப்பது அபூர்வமானது. வீரசக்தியானவள் இந்த கோனியம்மன் என்பதை உணர்த்தும் விதமாக அம்மனின் தோற்றம் உள்ளது.

பக்தர்கள் கேட்கும் வரங்களை தரும் வல்லமை கொண்ட இந்த ஆலயத்தில், அரச மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

குடும்பங்களில் நிலவும் சிக்கல்களுக்கு இங்கு பரிகார பூஜை செய்து வழிபட்டால் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கையாகும். இந்த ஆலயத்தில் மாசி மாதத்தில் திருவிழா நடக்கும். அப்போது, சிவன், அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கும். கோவிலின் எதிரில் யாக குண்டம் வளர்த்து, அக்னி பூஜை செய்யப்படும்.

பூஜையின் போது, தீர்த்த கலசத்தின் மீது வைத்து பூஜிக்கப்பட்ட மாங்கல்யத்தை அம்பிக்கைக்கு சாட்டுவார்கள். இதன்மூலம், அக்னி வடிவான சிவன், அம்மனை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

இதற்கு மறுநாள் கோவை குலுங்க தேர்த்திருவிழா நடைபெறும். இது தவிர தைப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, நவராத்திரி, தீபாவளி, பௌர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளி உள்ளிட்ட சிறப்பு நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

பெண்களுக்கான திருவிளக்கு பூஜைகளும் நடைபெறும். நகரின் மையப்பகுதியான டவுன் ஹாலில் இந்த ஆலயம் அமைந்திருப்பதால், பல்வேறு நகரில் உள்ள மக்களும் எளிதாக வர முடியும். உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து வரும் தொலைவு தான். காந்திபுரத்தில் இருந்து பேருந்து மூலம் வந்து சேரலாம்.

கோனியம்மன் கோவில் செல்லும் வழி: https://maps.app.goo.gl/upg5EVpmPviJCyXB7

கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோவில். 2ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கச்சியப்ப முனிவர், அருணகிரி நாதர், ஆகியோரால் பாடப்பெற்ற கோவிலாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் பட்டீஸ்வரஸ்வர் அவதாரத்தில் பச்சை நாயகி அம்மனுடன் வீற்றிருக்கிறார்.

தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத்தில் வரும் பங்குனி உத்திரம் விழா மிகவும் சிறப்பானதாகும்.

அப்போது, கோவில் தேர் அலங்காரப்படுத்தப்பட்டு, திருவீதி உலா வரும். அதேபோல, ஆண்டுக்கு ஒருமுறை, ஆனி மாதத்தில் நாற்று நடும் விழா நடைபெறும்.

ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி, பூராட நட்சத்திரத்தில் நாற்று நடுதலும், உத்திரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாக நடைபெறும்.

உக்கடம் பகுதியில் இருந்து பேரூருக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதில், பயணித்தால், பேரூர் பட்டீஸ்வரரை தரிசிக்கலாம்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் செல்லும் வழி: https://maps.app.goo.gl/CNq6noEF5iBbAhXn8

தென்னாடுடைய சிவனே போற்றி என்று போற்றப்படும் ஈசனின் தென் கயிலைதான் வெள்ளியங்கிரி மலை. இந்த கோவிலுக்கு சில வரலாறுகள் உண்டு.

சிவனையே மணப்பேன் என்று பிடிவாதத்துடன் இருந்த பெண், ஈசன் வரதாது போனால் உயிர் துறந்து விடுவேன் என்று கூறினாள். இதையறிந்து அந்தப் பெண்ணை தேடி ஈசன் தென்னிந்தியாவுக்கு வந்தார்.

ஆனால், சில சதித்திட்டங்களால், உரிய நேரத்தில் அந்தப் பெண்ணை ஈசனால் சந்திக்க முடியாமல் போனது. இதனால், ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண் நின்றபடியே உயிரை மாய்த்தார்.

நாளடைவில் அதுவே கன்னிகோவிலாய் உருவெடுத்தது. உரிய நேரத்தில் சென்று பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்ற விசனத்தில் தேடிச் சென்ற இடம் தான் வெள்ளியங்கிரி.

ஆனந்தத்திலோ, தியானத்திற்காகவோ வராத ஈசன், மனச்சோர்வுக்காக வெள்ளியங்கிரி மலை மீது ஏறி அமர்ந்தார். வெள்ளியங்கிரி மலையின் 7வது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்து நின்ற சுயம்புலிங்கமாகும்.

velliangiri temple Coimbatore

பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் ஈசனை கும்பிடும் படியாக சிவகோஷத்தை எழுப்பியவாறு பக்தர்கள் மலையேறுவது வழக்கமாகும்.

தெய்வீக நூல்களின் கூற்றுப்படி, மலை அல்லது லிங்கத்தை வழிபடுபவர்கள், அறம், பொருள், வீடு மற்றும் இன்பம் ஆகிய நல்பலன்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இறைமையின் மகத்துவம் மட்டுமல்லாமல், இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணரும் தலம் தான் வெள்ளியங்கிரி மலை.

இங்கு பெண்கள், குழந்தைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி இந்த வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. பூண்டி மலை அடிவாரம் வரையில் பேருந்து வசதியுண்டு.

வெள்ளியங்கிரி அடிவாரம் செல்லும் வழி: https://maps.app.goo.gl/PrhyioZykjUHDxJE8

கோவை மாவட்டத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோவில்களில் காரமடை அரங்கநாதர் கோவிலும் ஒன்று. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து 27 கி.மீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

15ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இத்தலத்தில் கருடாழ்வாரின் விருப்பத்திற்காக, கல்யாணக் கோலத்தில் காட்சியளித்த மகா விஷ்ணு, பிறகு இங்கேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

அரங்கநாத சுவாமி சன்னிதானத்துக்கு வலது புறம் அரங்கநாயகி தாயார் சன்னிதியும், இடது புறம் ஆண்டாள் சன்னிதியும் உள்ளது. முன்புறம் கருடக் கம்பம் அமைந்துள்ளது.பரவாசுதேவர் சன்னிதிக்கு அருகே 12 ஆழ்வார்களின் திருவுருவங்களும் சன்னிதிகள் அமைந்துள்ளன.

ஆண்டாள் சன்னிதிக்கு பக்கத்தில் வீரஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். கோவிலில் உள்ள காரை என்னும் ஒரு வகை மரம் தலவிருட்சமாக உள்ளது.

இம்மரத்தில் கயிறு கட்டினால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் வரும் என்பது முன்னோரின் நம்பிக்கையாகும். விஜயநகர பேரரசின் மதுரை நாயக்க மன்னர் திருமலை நாயக்கர் கொடிய நோயால் அவதிப்பட்டதாகவும், இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டதால், அந்நோயில் இருந்து விடுபட்டதாகவும் வரலாறுகள் உண்டு.

மாசி மகம், புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காரமடை அரங்கநாதர் கோவில் செல்லும் வழி: https://maps.app.goo.gl/tkGNDohYBAktvCVd7

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது பெரியநாயக்கன் பாளையம். அங்கிருந்து மேற்கு நோக்கி 11 கி.மீ சென்றால், மேற்கு தொடர்ச்சி மலையின் மீது இருக்கும் ஒரு குன்றில் பாலமலை உள்ளது.

இங்கு அரங்நாதராக திருமால் எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபத்தில் நின்றவாறு, அரங்கநாதரை வழிபடலாம். 4 திருக்கரங்களுடன் நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

சுயம்பு மூர்த்தியான அரங்கநாதருக்கு பூஜை செய்த பிறகு, மற்ற கடவுள்களுக்கு பூஜைகள் நடப்பது வழக்கம். தும்பக்கையாழ்வார் சன்னதிக்கு அருகே உள்ள பூவரச மரத்தில் மஞ்சக் கயிறும், தொட்டிலும் கட்சி வழிபாட்டால், மாங்கல்ய வரமும், குழந்தை வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு 365 நாட்களும் அன்னதானம் வழங்கப்படும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் தேர் திருவிழாவும், சித்ரா பவுர்ணமியன்று முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடைபெறும்.

புரட்டாசி சனிக்கிழமை, பொங்கல், தீபாவளி, அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடை திறந்திருக்கும்.

காந்திரபுரத்தில் இருந்து பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள கோவனூர் பகுதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்து ஜீப் மூலமாக பால மலைக்கு செல்லலாம்.

சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், நடந்தோ அல்லது பைக்கில் செல்வதோ ஆபத்தானதாகும்.

பாலமலை அரங்கநாதர் கோவில் செல்லும் வழி: https://maps.app.goo.gl/tM8bgA1fXZ9vMVVU8

பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கு பகுதியில் சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆனைமலை மாசாணி அம்மன் கோவில். இந்தக் கோவிலின் பிரதான தெய்வமான மாசாணி அம்மன் சன்னதி இருக்கிறது. அதில், மாசாணி அம்மன் படுத்த வாக்கில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

தலை முதல் பாதம் வரையில் 15 அடி நீளமுடையது. தெற்கே தலைவைத்து படுத்திரும் அம்மனின் திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம் உள்ளிட்டவை காணப்படுகின்றன.

இந்தக் கோவிலில் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன் சன்னதிகள் முக்கியமானவையாகும். நான்கு வாயில்களை கொண்டுள்ள இந்தக் கோவிலின் கருவறையின் கிழக்கு பக்கத்தில் அம்மன் சுயம்புவாக இருக்கிறார்.

மாசாணி அம்மன் கோவிலின் காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், கருப்பராயர், விநாயகர், மகிஷாசுவர்த்தினி, சப்தமாதாக்கள் ஆகியோர் உள்ளனர்.

மாசாணி அம்மனை வேண்டி சுற்றி வந்தால், தீராத நோயும் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் அமமனை வேண்டினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல, நீண்ட கால கடன், செய்வினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மிளகாய் அரைத்து அம்மன் மீது பூசி வேண்டினால், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

தங்களின் பிரச்னைகளை பேப்பரில் எழுதி, உப்பு சாற்றி வழிபாட்டால் நினைத்தது கைகூடுமாம். மாசாணி அம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கும் விழா என்று அழைக்கப்படும் தீமிதித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கம்.

மாசாணி அம்மன் கோவில் செல்லும் வழி: https://maps.app.goo.gl/dfX4medFXqz6YwYG8

கோவை என்றவுடன் நினைவுக்கு வரும் சில ஆலயங்களில் முக்கியமானதாக இருப்பது மேட்டுப்பாளையத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவில். தேக்கம்பட்டி செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ள நெல்லித்துறை பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

வன பத்ரகாளியம்மன் கோவிலில், சுயம்பு மூர்த்தியாக அம்மன் காட்சியளிக்கிறார். பகாசுரன் மற்றும் பீமன் ஆகியோர் காவல்தெய்வங்களாக உள்ளனர். இவர்களுக்கு இடையே குழந்தையுடன் அமர்ந்திருக்கும் குந்தி தேவி சிலையும் இருக்கிறது.

இந்தக் கோவிலின் தல மரமாக தொரத்தி எனும் வகை மரம் உள்ளது. கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கும் பவானி ஆற்றின் படித்துரையில் விநாயகர் வீற்றிருக்கிறார். சிறிது தூரத்தில் நாக தேவதை காட்சியளிக்கிறாள்.

வெற்றிலை மீது கற்பூரத்தை கொளுத்தி பவானி ஆற்றில் விடுவது இக்கோவிலின் மரபாகும். அதேவேளையில், அம்மனுக்கு உகந்ததாக பார்க்கப்படும் ஆடு பலியிடுதல் நிகழ்ச்சியானது, வாராவாரம் ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடக்கும்.

வாரத்திற்கு 300 முதல் 350 கிடாய்கள் வெட்டப்பட்டு, அம்மனுக்கு பலியிடப்படுகிறது. பில்லி சூனியம், செய்வினை உள்ளிட்ட மந்திர தந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து மனமுருகி வேண்டினால், அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

நினைத்த காரியம் நிறைவேறினால், பெண்களை தாலியை உண்டியலில் போடும் வழக்கமும் இருந்து வருகிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள், எலுமிச்சம்பழ மாலை சாட்டுவார்கள்.

குறிப்பாக, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால், வேண்டியது நிறைவேறும் என்று அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழி: https://maps.app.goo.gl/KgEauqJCAMz7aonBA

Recent News