கோவை: இன்று நம்முடைய நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனி அடையாளங்கள் இருக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் சேவை மையம் நடத்தும் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் கைத்தறிகளால் ஆன ஆடைகளை அணிந்து கொண்டு பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் மக்கள் சேவை மையத்தின் நிறுவனருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் மாணவர்களுடன் இணைந்து அவர் ரேம்ப் வாக் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர்
ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய வகையில் நம்முடைய நாட்டின் விஷயங்களை எடுத்துச் செல்பவர் பிரதமர் நரேந்திர மோடி என்றும் அவரிடம் இருந்து கிடைத்த இன்ஸ்பிரேஷன் மட்டுமே இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என்றார். கைத்தறி என்பதை போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும், கைத்தறி அடையாளப்படுத்த வேண்டும் என்பதை விட அவரே மிகச் சிறிய அம்பாசிடராக ஹேண்ட்லூமுக்கு இருக்கிறார் என்றார்.
பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் சென்றாலும், அந்தப் பகுதியினுடைய அடையாளங்கள், அவர்களின் உடைகளை அணிந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியோடு செய்வார் என்றார். இன்று நம்முடைய நாட்டில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனி அடையாளங்கள் இருக்கிறது என்றார்.
காஷ்மீரில் செய்யப்படும் எம்ராய்டரி என்பது நுண்ணிய அளவில் இருக்கும். பஸ்மினா ஷாலில் எம்பிராய்டரி முன்னை போல் செய்ய முடிவதில்லை என தற்போது கூறுகிறார்கள். நான் அதை ஆச்சரியமாக எதனால் என்று கேட்டேன், அந்த ஊசிக்குள் சிறிய குழந்தைகள் நூலை முன் காலத்தில் நுழைத்துக் கொடுப்பார்கள் அப்பொழுது சிறிய கைகள் அதற்கு உதவி செய்தது,
ஆனால் இப்போது குழந்தை தொழிலாளர்களை இந்த இண்டஸ்ட்ரியில் இருந்து எடுத்ததால், எங்களால் அந்த மை நியூட் வர்க்கை செய்ய முடியவில்லை என கூறினார்கள் என்றார்.
ஒவ்வொரு குடும்பமும், கைத்தறி நெசவில் இருப்பவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை செய்வார்கள்.
குடும்பமாக இணைந்து செய்வதே பாரம்பரியமாக இருந்தது. ஆனால் நான் குழந்தைகளை வேலை வாங்க வேண்டும் என்று அர்த்தத்தில் நான் சொல்லவில்லை, குடும்பமாக ஒரு விஷயத்தை செய்யும் போது அதில் பாரம்பரியம் இருக்கிறது என்று கூறுகிறேன் என்றார்.
ராஜஸ்தான் பக்கம் பாந்தினி, குஜராத்தின் பட்டோலா, கர்நாடகாவில் Dharwad காட்டன் என, 40 வருடங்கள் ஆனாலும் அந்த காட்டன் புடவை அப்படியே இருக்கும், காஞ்சிபுரம் பட்டு சிறுமுகை soft silk, negamam காட்டன், Kovai pattu, சின்னாளப்பட்டி காட்டன், என்ன தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு ஹேண்டிலும்கள் இருப்பது நமக்கு மிகவும் பெருமையான விஷயம் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக தெரிவித்தார். விவசாயத்திற்கு சரி சமமாக நெசவுத்தொழில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் அந்த தொழிலுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றார். இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் கொள்கிறார்கள் என தெரிவித்த அவர் இதன் மூலம் பிரதமர் கூறும் அனைத்து விதமான மக்களுக்கும் அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதை காட்டுவதாக சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டிலும் பல்வேறு கைத்தறிகளுக்கு சிறப்பான அடையாளம் இருப்பதாக தெரிவித்தார். கோவைக்கும் பல்வேறு பாரம்பரியப்பட்டுகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த தொழில் குறித்தான புரிதல் மாணவர்களுக்கு கிடைப்பதாக தெரிவித்தார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு அந்தந்த பகுதிகளில் வங்கிகளில் பிரச்சனைகள் இருந்தால் அவர்களுக்கு உதவி புரிவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதிகமான கோஆப்பரேட்டிவ் சொசைட்டிகள் மூலமாகத்தான் மக்களுக்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதாகவும் ஆனால் அவை அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பணத்தை அவர்களுக்கு உள்ளாகவே பிரித்துக் கொள்வது போல் தெரிவதாகவும் செயல்பாடுகள் அதிகமாக இல்லை என தெரிவித்தார். கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டிகள் மாநில அரசின் கீழ் வருவதால் அதன் நிர்வாகத்தை சீரமைத்து மத்திய அரசின் பல்வேறு உதவி திட்டங்களை நாமும் பெற முடியும் அதற்கு மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். One District One Product என்பது மத்திய அரசின் திட்டம் என தெரிவித்த அவர் பிரதமர் இதனை பல்வேறு இடங்களில் பிரபலப்படுத்தி வருவதாகவும் கூறினார். தமிழக அரசும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்பதை அடையாளப்படுத்தி அந்த பொருளை உருவாக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் முயற்சி எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அவர் செய்யும் பொழுது கூடுதலான வங்கி கடன் வசதிகளுடன் கூடிய மையங்கள் ஆகியவை அமைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவித்தார்.
சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து முதலமைச்சர் தெரிவித்த கருத்து பதில் அளித்த அவர், தமிழர் என்று கூறினால் திமுகவினரிடம் சென்று சான்றிதழ் வாங்கி வர வேண்டுமென்று நினைக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தை சார்ந்த ஒருவர் ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு கூட வாய்ப்புகள் அவருக்கு தான் உள்ளதாகவும் அப்படி இருக்கின்ற பொழுது ஆதரவு தெரிவிக்காமல் இருப்பதாகவும் தமிழ் தமிழர்கள் தமிழ் கலாச்சாரம் என்று பொய் பேசும் திராவிட முன்னேற்ற கழகம் இந்த முறை அவர்களுடைய ஆதரவை சிபி ராதாகிருஷ்ணனுக்கு வழங்குவதன் வாயிலாக உண்மையான தமிழ் நண்பனா இல்லையா என்பதை காட்ட முடியும் என குறிப்பிட்டார். வரலாற்று சிறப்புமிக்க பெருமை தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாகவும் இது போன்ற தமிழருக்கு கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பினை கொண்டாடாமல் பாராட்டு தெரிவிக்காமல் இது போன்ற ஒரு தருணத்தை வேண்டுமென்றே அரசியலுக்காக முகமூடி என்று சிறுமைப்படுத்த கூடிய வேலையை தமிழக முதலமைச்சர் செய்கிறார் என சாடினார்.
ஒரிசாவை சார்ந்த பழங்குடியின பெண்மணியை ஜனாதிபதியாக வேட்பாளராக அறிவிக்கின்ற பொழுது ஒரிசாவை சார்ந்த அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்ததாகவும், மகாராஷ்டிராவிலும் ஜனாதிபதியாக பெண்மணிக்கு வாய்ப்பு கிடைத்த பொழுது அங்கிருந்து அரசியல் கட்சியினரும் பாராட்டு தெரிவித்ததாகவும் ஆனால் தமிழ்நாட்டில் திமுக அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற செய்வது அவமானது என தெரிவித்தார். எனவே திமுகவும் கூட்டணி கட்சியில் இருப்பவர்களும் அந்த அரசியலுக்காக துணை போகாமல் சிபி ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த வரலாற்று வாய்ப்பினை பெருமையில் பங்கு கொள்வோம் என்று ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
பீகாரில் ராகுல் காந்தியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் மு க ஸ்டாலின் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக மாநிலத்தின் முதலமைச்சரே ரயில் பயணங்கள் குறித்து கேவலமான வீடியோக்கள் பதிவிட்டது. அவர்களைப் பற்றி இழிவாக பேசுகின்ற அமைச்சர்கள் நிர்வாகிகளை எல்லாம் அரவணைப்பது என்று வட இந்திய மக்களை எல்லாம் அவமதிக்கின்ற வேலையை செய்து கொண்டிருப்பதாகவும், தமிழ்நாடு அரசியலுக்காக பல்வேறு மாநிலங்களில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்குவதாக தெரிவித்தார். பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் இங்கு வாக்குரிமை பெறக்கூடாது என்றால் தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கு மற்ற மாநிலத்தில் கொடுக்கக் கூடாது என்று அங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பேசினால் எவ்வாறு இருக்கும் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் இது இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற செயல் எனவும் குறிப்பிட்டார்.
பொள்ளாச்சி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது எழுந்த பாலியல் புகார் குறித்து பேசிய அவர், அந்த வழக்கில் இரண்டு பேர் மீது போக்சோ வழக்கும் ஐந்து பேர் பணியிட மாற்றமும் செய்துள்ளார்கள். திராவிட மாடல் எனும் திமுக அரசாங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பட்டியல் இனத்தை சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை பள்ளிகளில் குழந்தைகளுக்கும் தற்பொழுது பாதுகாப்பு இல்லை என்ற சூழலுக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் எனவும் கற்பனையான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்காமல் முதலமைச்சர் உண்மையிலேயே மாணவிகளின் நலன் பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.
ராமர் குறித்து வன்னியரசு பேசிய கருத்துக்கு பதில் அளித்த அவர், வன்னியரசு முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் என்றும் கற்பனையாக அவர்கள் பேசுவதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார். பல்வேறு மக்களுக்கும் வாழ்க்கையின் முக்கியமான தர்மங்களை சொல்லி தரக்கூடிய ராமாயணம் மகாபாரதம் போன்ற உண்மை கதைகளை அவர்கள் படிக்க வேண்டும் என தெரிவித்தார். யாரோ ஒருவர் கட்டுக்கதை பேசியதை வைத்து பேசுவது சரியல்ல எனவும் தெரிவித்தார். இந்த நாட்டில் சனாதான தர்மத்தை அழிப்பதற்காக பல்வேறு திசைகளில் இருந்து வந்து தர்மத்தை அழிக்க முயற்சி செய்தார்கள் எனவும் ஆனால் அவை அனைத்தையும் மீறி சனாதன தர்மம் எனப்படும் இந்து தர்மம் நிலை பெற்று இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் நினைத்தால் இதனை அழித்து விட முடியாது என்றும் தெரிவித்தார். ஒரு மனிதனின் வாழ்க்கையை பூரணமாக வாழ்வதற்கு உதவி புரியும் அமைதியான தர்மம் உலகிலேயே இருக்க முடியும் என்றால் அது சனாதன தர்மம் தான் இந்து தர்மத்தை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசுபவர்கள் எல்லாம் அவர்கள் அழிந்து செல்கிறார்கள் என்று வரலாறு கூறும் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது தொகுதி பங்கீடு விஷயங்கள் எல்லாம் டெல்லி தலைமையும் இங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுகவும் சேர்ந்து தான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.