கோவை: கோவையில் வணிக கேஸ் சிலிண்டர்களை குடோனில் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த கேஸ் ஏஜென்சி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
கோவை மாவட்டத்திலும் இது தொடர்பாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கோவை அவிநாசி சாலை லட்சுமி மில் பகுதியில் சாந்தி ஏஜென்சீஸ் என்ற கேஸ் நிறுவனம் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை குடோனில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இண்டேன்,பாரத் கேஸ் நிறுவன அதிகாரிகள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் உணவு வழங்கல் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அங்கு 1000 வணிக கேஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து ஏஜென்சி உரிமையாளர் கார்த்திக் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கேஸ் சிலிண்டர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.
அதனைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் ஏஜென்சி அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

