கோவை: வால்பாறையில் சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முந்தா மற்றும் மோனிகா தேவி தம்பதியினர் தங்களது 7 வயது மகள் ரோஷினி உடன் தங்கி, பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று வீட்டின் அருகே சிறுமி ரோஷினி விளையாடிக்கொண்டிருந்தார். அருகில் அவரது தாய் மோனிகா தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று சிறுமியைக் கவ்விச்சென்று தோட்டத்திற்குள் மறைந்தது.
இதனைப்பார்த்து துடித்த சிறுமியின் தாய் மோனிகாவில் அலறல் சத்தத்தைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சிறுமியைத் தேடினர்.
மேலும், வனத்துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் த்ரெய்விக்கப்பட்டது. டிரோன் கேமிரா கொண்டு சிறுமியைத் தேடி வந்த நிலையில், சிறுத்தை இழுத்துச் சென்ற இடத்திலிருந்து 300 மீ., தொலைவில் சிறுமியின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறுமியின் உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
வால்பாறையில் தாயின் கண்முன்னே சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்ற சம்பவம் வால்பாறையில் சோகத்தையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.