கோவையில் பைக்கில் போய்ப் பாருங்க அப்போ தெரியும்! வானதி கொந்தளிப்பு!

கோவை: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு எம்.எல்.ஏ., வானதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சட்ட மேதை அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் அவரது திருவுருவச் சிலைக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக வடகோவையில் உள்ள மத்திய உணவுக் கிடங்கு உள்ள அம்பேத்கர் சிலைக்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், பா.ஜ.க., தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., மூன்று விதமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் அம்பேத்கர் சிலை உள்ள இடங்களைத் தூய்மைப்படுத்தி, தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று ஒவ்வொரு பகுதிகளிலும், அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இன்று பல்வேறு பகுதிகளில் அரசுத் திட்டங்களின் கீழ், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாடு முழுவதும் அம்பேத்கரின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், அவர் இந்த நாட்டிற்குக் கொடுத்திருக்கும் பங்களிப்பைப் பற்றி பா.ஜ.க., நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறிக்கொண்டு இருக்கிறது.

கோவையின் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரிலே இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் முன் வைத்து நான் பேசி வருகிறேன். பல்வேறு அமைச்சர்கள் கோயம்புத்தூருக்கு இதைச் செய்தோம் அதைச் செய்தோம் என பதில் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சாலைகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கி இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்குத் தெரியும் கோவையில் சாலை எவ்வளவு பழுதான நிலையில் இருக்கிறது என்று. உடனடியாக பணிவை ஆரம்பிப்பதாக அரசு சொல்லுகிறது. தேர்தலுக்காக வேலை செய்யாமல் மக்களுக்காக பணி செய்ய வேண்டும் என்பதே எங்களுடைய வேண்டுகோளாக உள்ளது.

இன்னும் கூட இந்த பகுதியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, மத்திய, மாநில அரசுகளின் வாயிலாக என்னவெல்லாம் கொண்டு வர முடியுமோ, சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அந்த பணிகளை நிச்சயம் செய்து கொண்டே இருப்பேன் என்று கூறினார்.

பா.ஜ.க., புதிய மாநில தலைவர் செயல்பாட்டுக்கும், பழைய தலைமையின் செயல்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு:-

ஒருவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது என்றால், இன்னும் பிறந்து இருக்கும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரவில்லை. அதற்குள் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் எப்படிக் கூற முடியும்?

இது ஜனநாயக கட்சி. பேரன் பிறந்து விட்டான், கொள் பேரன் பிறந்தான் எங்களுக்கு தலைவருக்குப் பஞ்சமே இல்லை என்று சொல்லுகின்ற கட்சி நாங்கள் அல்ல.

மாநிலத் தலைவர் ஆக அண்ணாமலை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். எங்களைப் பொறுத்த வரை எங்களுடைய கட்சியில் தலைமை பொறுப்பு என்பது, குழு முடிவு செய்யும் தலைமை செயல் படுத்துவார்கள் என்பதை மட்டும் தான் கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கிறோம்.

இன்று மாநில தலைவராகப் பொறுப்பேற்று இருக்கக் கூடிய நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க காலத்தில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் நல்ல பங்களிப்பைக் கொடுத்தவர்.

புதிய நபர் கட்சிக்குள் வரும் போது, அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். அவர் இன்று மாநில தலைவராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் நல்ல விஷயம்.

அவருடைய பணி சிறக்க நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவும், இணைந்து பணியாற்றவும் கட்சியினுடைய கோடிக் கணக்கான தொண்டர்கள் அவரின் பின்னால் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நல்ல முறையில் அவர் எங்களை வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்று கூறினார்.

மாநிலத் தலைவர் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லையா? என்ற கேள்விக்கு:-

ஒருபோதும் எனக்கு இந்த பதவி வேண்டும், அந்த பதவி வேண்டும் எனக் கேட்டதே இல்லை. எந்த நேரத்தில் என்னிடம் எந்த வேலையைக் கொடுத்தால் சரியாக இருக்கும் எனக் கட்சி நினைக்கிறதோ அதை நான் சரியாக ஏற்று நடத்துகிறேன். என்றார்.

பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணி குறித்த கேள்விக்கு:-

மத்திய அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதல் படி, அமைக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி மிகச் சிறப்பாகச் செயல்படும். தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் கூட்டணியின் ஒற்றை குறிக்கோள்.

இவ்வாறு வானதி கூறினார்.

Recent News

Latest Articles