கோவை: தனக்கு பிறந்தநாள் என்பதால் கொண்டாட்டத்திற்கு பணம் கொடுக்கக் கூறி, கோவை கவுண்டம்பாளையத்தில் சாலையில் நடந்து சென்ற இளைஞரை கட்டையால் தாக்கி மண்டையை உடைத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கோவை நல்லாம்பாளையம் அருகே உள்ள ஜெய் நகரை சேர்ந்தவர் காமன் (19). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தியேட்டர் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினார்.
அவர் காமனிடம், இன்று எனது பிறந்தநாள், மது குடிக்க வேண்டும் என்று பணம் கேட்டுள்ளார். அதற்கு காமன் தன்னிடம் பணம் இல்லை என்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கட்டையால் காமனைத் தாக்கி அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.200யை பறித்து மிரட்டி சென்றார்.
இதுகுறித்து காமன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் காமனை தாக்கி பணத்தை பறித்து சென்றது இடையர்பாளையம் பள்ளி வீதியை சேர்ந்த ஜீவானந்தம் என்ற குட்டி ஜீவா (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

