அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல் விமானப் பயணம்: ரவுண்ட் டேபிள் இந்தியா – ஜெம் மருத்துவமனை அசத்தல் முயற்சி

கோவை: ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்த 30 வசதி வாய்ப்பற்ற குழந்தைகளுக்கு விமானப் பயண அனுபவத்தை வழங்கி ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பினர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் ‘பிளைட் ஆப் பேண்டஸி’ (Flight of Fantasy) என்ற இத்திட்டத்தின் மூலம், வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் வாழ்வில் புதிய நம்பிக்கையைப் பெறவும், பெரிய இலக்குகளை அடையவும் ஆண்டுதோறும் விமானப் பயணம் மற்றும் கல்விச் சுற்றுலாக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 13) சென்னையைச் சேர்ந்த 30 குழந்தைகள் விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இத்திட்டத்தை கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 மற்றும் ஜெம் மருத்துவமனை ஆகியவை இணைந்து செயல்படுத்தின.

கோவை வந்தடைந்த மாணவர்கள், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்களுடன் இணைந்து ஜி.டி கார் அருங்காட்சியகம், வனக் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மண்டல அறிவியல் மையம் ஆகிய இடங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இது குறித்து கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133-இன் தலைவர் ஸ்ரீராம் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், “கல்வி மூலம் சுதந்திரம் மற்றும் சமூகச் சேவை மூலம் முன்னேற்றம் என்பதே எங்களது நோக்கம். அரசுப் பள்ளி மாணவர்களின் மனதில் பெரிய கனவுகளை விதைக்கவும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டவும் இந்த விமானப் பயணம் ஒரு கருவியாக அமையும்,” எனத் தெரிவித்தனர்.

சமூக நலனில் அக்கறை கொண்டு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் ஆதரவு அளித்து வரும் ஜெம் மருத்துவமனைக்கு ரவுண்ட் டேபிள் அமைப்பினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் சுபாஷ், ஸ்ரீராம், ஸ்ரீஹரி, ஈஸ்வர், கார்த்திக் குமார் மற்றும் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாதம்தோறும் மதிப்பூட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது....

Video

கோவையில் மண் அரிப்பில் சிக்கிய லாரி

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து ஏற்பட்ட மண் அரிப்பு அவ்வழியாக சென்ற லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி போத்தனூர் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீர் குழாய் உடைந்து...