கோவை: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, கோவை போக்குவரத்து போலீசார் சுமார் 3,000 இலவச ஹெல்மெட்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
கோவை நகரத்தை விபத்தில்லா பகுதியாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். இதில், ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லட்சுமி மில்ஸ் சந்திப்பில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போலீசார் இலவச ஹெல்மெட் வழங்கினர். மேலும், ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை போலீசார் விளக்கினர்.
இந்நிலையில், தற்போது கோவை மாநகர போக்குவரத்து துறை, ஸ்ரீராம் பைனான்ஸ் மற்றும் எலிக்ஸர் பவுண்டேஷன் இணைந்து, முதற்கட்டமாக 500 தூய்மை பணியாளர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து, போக்குவரத்து துணைக் கமிஷனர் அசோக் குமார் கூறுகையில், “இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். கடந்த ஆண்டில் ஹெல்மெட் அணிந்ததினால் பலர் விபத்துகளில் உயிர் தப்பியுள்ளனர். இதனை மக்களுக்கு நினைவூட்டவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.” என்றார்.