கோவை: கோவை கரும்புக்கடை பகுதிகளில் நள்ளிரவில் காய்கறி டிப்பர் கூடைகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை உக்கடம் கரும்புக்கடை சாரமேடு கடைவீதி பகுதியில் பல்வேறு காய்கறி கடைகள், துணிக்கடைகள் இயங்கி வருகிறது.
காய்கறி கடைக்காரர்கள் காய்கறிகளை வைத்திருக்கும் டிப்பர் கூடைகளை தினமும் வியாபாரம் முடிந்து இரவு கடைக்கு வெளியே அடுக்கி வைத்து விட்டு செல்வார்கள். இந்நிலையில் நள்ளிரவில் மளிகை கடைக்கு வெளியே வைத்திருந்த பல்வேறு டிப்பர் திருடப்பட்டுள்ளது.
கடையின் உரிமையாளர் காலை கடைக்கு வந்த போது அதனை கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது மர்ம நபர்கள் மினி சரக்கு வாகனத்தில் அந்த டிப்பர் கூடைகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது.
தொடர்ந்து கடையின் உரிமையாளர் கரும்புக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தொடர்ச்சியாக இரவு நேரத்தில் அப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள மக்கள் காவல் துறை ரோந்து பணிகளை தீவிரமாக மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



