கோவை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் 3 வது துறைசார் விருதுகள் மற்றும் வருடாந்திர கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐசிஎப் தலைவர் துளசிதரன், சிட்டி பருத்தி கமிட்டி தலைவர் ராஜ்குமார், சைமா சிடிஆர்ஏ தலைவர் சுந்தரராமன், சிஸ்பா செயலாளர் ஜெகதீஸ் சந்திரன், சைமா செயலாளர் செல்வராஜ், எல்ஜி பெல்ட் நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆர்.டி.எப் தொழில்துறை விருதுகளை வழங்கினார்கள்.
துறையின் சாதனையாளர் விருது ஸ்ரீகுமரகுரு மில் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுஸ்ராமசாமிக்கும், மறுசுழற்சி மூலம் பல வண்ண நூல் தயாரிப்பாளர் விருதுதினை பொள்ளாச்சி சேர்ந்த திருமலை டெக்ஸ்டைல்ஸ் மாரிமுத்துவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த ஆப்டிகல் வெயிட் நூல் தயாரிப்பாளருக்கான விருது சாய் கிருஷ்ணா காட்டன் மில் விஜய்ஸ்ரீனிவாசனுக்கும், மறுசுழற்சி செய்யப்பட்ட சிறந்த கிரே நூல் தயாரிப்பாளருக்கான விருது உடுமலை கவிகரன் ஸ்பின் டெக்ஸ் குழுமம் மனோகரனுக்கும், சிறந்த கிரே காடா உற்பத்தியாளர் விருது ஜெமினி டெக்ஸ்டைல்ஸ் சண்முகத்திற்கும் வழங்கப்பட்டது.
சிறந்த பெட்பாட்டில் பைபர் தயாரிப்பாளர் விருது சேலம் மீனாட்சி பைபர் நிறுவனத்தின் கலைசெல்வன் பழனியப்பனுக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் ஆர்டிஎப் சேர்மன் ஆக ஜெயபால், பொதுச் செயலாளராக ராஜபாளையம் அர்ஜூனா டெக்ஸ்டைல் சீதாராமராஜா, உபதலைவராக உடுமலை கவிதா, டெக்ஸ்டைல் குரூப் மனோகர், துணை தலைவர்களாக சூர்யபாலாஜி மில்ஸ் சிவகுமார், பல்லடம் கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் சத்தியசீலன், உடுமலை ஸ்ரீஹரி டெக்ஸ்டைல் ஜெ.ரமேஸ், ஆண்டாள் மில்ஸ் ரகு, பொருளாளர் பாலாஜி மற்றும் மாநில முழுவதும் பகுதி நிர்வாகிகள் பொறுப்பேற்று கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு வருடம் 110 லட்சம் பேல் பருத்தி தேவை. விளைச்சல் 5 லட்சம் பேல்கள் கூட தமிழகத்தில் விளைவது இல்லை. இதனால் 98% பருத்தி தேவையை வடஇந்திய மாநிலங்களில் இருந்தே தமிழக நூற்பாலைகள் கொள்முதல் செய்து வருகின்றோம். கடந்த 2017 ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பின் பருத்தி கொள்முதல் செய்யும் மாநிலத்துக்கு 2.5% வரியும் மத்திய அரசுக்கு 2.5% வரியும் செலுத்துவதினால் தமிழக அரசுக்கு மொத்த நூற்பாலையின் தேவையில் 98% எந்த வரி வருமானமும் பருத்தியின் மூலமாக கிடைப்பது இல்லை.
மதிப்பு கூட்டுதல் வாயிலாக மட்டுமே கிடைப்பதினால் 900 கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பும் கிலோ ஒன்றுக்கு தமிழக நூற்பாலைகளுக்கு வட இந்தியாவில் இருந்து கொண்டு வர போக்குவரத்து செலவாக வருடம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக செலவு செய்வதினால் மாநில அரசுக்கும் தமிழக நூற்பாலைகளுக்கும் நிதி இழப்பு ஏற்படுவதுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தையில் தமிழக ஜவுளி துறையினர் போட்டியிட இயலாமல் தொடர்ந்து பின்தங்கி வருகின்றோம்.
மாநில அரசு விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 5000 மானியமும் அதிக விளைச்சல் மேற்கொள்ள தரமான விதைகளையும், நிலத்தின் சத்து மேம்பட உரங்களையும் ஆலோசனைளையும் வழங்கினால் அரசுக்கு அதிகபட்சம் 700 கோடி ரூபாய் நிதி செலவாகும். இதன் மூலம் தமிழகம் பருத்தி விளைச்சலில் தன்னிறைவு பெறுவதுடன் அதிக வேலை வாய்ப்பையும் ஏற்றுமதி ஆர்டர்கள் மூலம் அன்னிய செலாவணியை ஈட்ட இயலும், சிசிஐ மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படும் அமைப்பு நாட்டில் 47% பருத்தி நுகர்வோர்கள் உள்ள தமிழகத்தில் கிளை அமைக்க பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்தும் தொடர்ந்து புறக்கணித்து வருவதை மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மின்சார வாரியம் 1957ஆண்டு ஜூலை 1 ம் தேதி துவங்கிய காலத்தில் இருந்து 68 ஆண்டு கால வரலாற்றில் குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு பீக் ஹவர் கட்டணம் விதிக்கப்பட்டது இல்லை.
தற்போது TOD மீட்டர் பொறுத்தி காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என 8மணி நேரம் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 15% மின்கட்டணத்தை வசூல் செய்கின்றனர்.அதே போல உயர் அழுத்த மின்சாரமான HT -ஐ விட LTCT தாழ்வழுத்த மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு யூனிட் கட்டணம் அதிகம் விதிக்கப்பட்டு உள்ளது.
கூரையின் மீது சோலார் பேனல் அமைத்து மின்உற்பத்தி செய்யும் தொழில்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் நெட்வொர்க் கட்டணம் விதிப்பதும் அதே போல நிலைகட்டணம் KW ஒன்றுக்கு 35 இருந்து ரூ.165 ரூபாயாக பயன்படுத்தினாலும் பயன்படுத்தா விட்டாலும் 112KW 3920 ரூபாயில் இருந்து 18,480 ரூபாயாக மாத மாதம் செலுத்த வேண்டும் என வசூலிப்பதும் இதர 12 வகையான சேவை கட்டணங்களும் கடந்த 2022 முதல் 2025 வரை நான்கு ஆண்டுகளில் 64% உயர்த்தியதினால் சிறு நூற்பாலைகள் முன்பை விட. 1,50,000 ரூபாய் கூடுதலாக மாதமாதம் செலுத்தி வருகின்றோம்.
அதே போல HT இணைப்பை பெற்ற நடுத்தர நிறுவனங்கள் கடந்த 2022 முதல் 350 ரூபாய் கிலோவாட் ஒன்றுக்கு செலுத்தி வந்ததை தற்போது 608 ஆக உயர்த்தியதினால் உதாரணத்துக்கு 500 கிலோவாட் இணைப்பு பெற்றவர் முன்பு மாதம் 1,75,000 செலுத்தியதை தற்போது 3,04,000 என நாள் ஒன்றுக்கு 10,133 ரூபாய் இயக்கினாலும் இயக்காவிட்டாலும் யூனிட் கட்டணம் போக செலுத்த வேண்டும். தொழில்துறையில் 10 போட்டி மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மின்கட்டணம் அதிகம்.மின்சார வாரியம் 2022 ல் புதிய மின்கட்டணம் அமல்படுத்தியதில் இருந்தே குறு சிறு தொழில் துறையினர் ஒழுங்கு முறை ஆணையம் மற்றும் மாநில அரசிடம் போராட்டங்கள் வாயிலாக முறையிட்டோம்.
முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க பலகட்ட போராட்டத்தை முன்னெடுத்தும் தொடர்ந்து கோரிக்கை நிறைவேற்றப்படாமல் வருடா வருடம் மின்கட்டணம் உயர்த்தி வருவதினால் தொடர்ந்து குறுசிறு நிறுவனங்கள் நலிவடைந்து வருவதை முதலமைச்சர் தாயுள்ளத்துடன் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி கேட்டு கொள்கின்றோம். என்றனர்.