கோவை: கோவையில் 7 டன் பேருந்தை 30 மீட்டர் இழுத்து அசத்திய இந்தியாவின் இரும்பு மனிதரை கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வியந்து பார்த்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழாவுடன் விளையாட்டு அகாடமி திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்தியாவின் ‘ஸ்ட்ராங்மேன்’ என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச வீரர் கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியின்போது, கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில், சுமார் 7 டன் எடையுள்ள கல்லூரி பேருந்தை தரையில் அமர்ந்தவாறு கயிறு கொண்டு 30 மீட்டர் தூரம் இழுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதற்கு முன்பு, நாகர்கோவிலில் 9.5 டன் எடையுள்ள லாரியை கயிறு கொண்டு இழுத்தும், 370 கிலோ எடையுள்ள இஞ்சின் இல்லாத காரைத் தூக்கியும், நாகர்கோவிலில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க வீரரின் சவாலை ஏற்று 85 கிலோ எடையுள்ள குண்டை கையால் தூக்கி வெற்றி பெற்றவர் கண்ணன்.
மேலும், சர்வதேச ஸ்ட்ராங்மேன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ எனும் பட்டத்தையும் பெற்றவர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன், “தமிழகத்தில் இளைஞர்கள் பலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். விளையாட்டு மூலம் இளைஞர்களை இதிலிருந்து மீட்க முடியும். முதல் முறையாக பேருந்தை தரையில் அமர்ந்தபடி 30 மீட்டர் இழுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அனுபவம் மேலும் சாதனைகள் புரிய ஊக்கமளிக்கிறது,” என்றார்.
மேலும், “பண்டைய தமிழர்கள் உடல் வலிமையில் சிறந்து விளங்கினர். ஆனால், இன்று போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். என்னைப் போன்று வலிமையான இளைஞர்களை உருவாக்குவதே எனது லட்சியம்.
இளவட்டக் கல் தூக்குதல் போன்ற பயிற்சிகள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் பயன் தருவதுடன் ஆயுளை அதிகரிக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு இளவட்டக் கல் போட்டிகளை நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடலாம்,” என்று தெரிவித்தார்.