கோவை: தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் கல்லூரி மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் Internship மேற்கொள்ள உள்ளார்கள்.
தமிழகத்திலேயே முதன் முறையாக கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமாருடன் 11 கல்லூரி மாணவர்கள் ஒரு மாதம் காலம் Internship மேற்கொள்ள உள்ளார்கள்.
இதற்காக யங் இந்தியா என்ற அமைப்பின் மூலம் 11 அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் நேர்முகத் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் ஒரு மாத காலம் பாராளுமன்ற உறுப்பினர் உடன் பயணித்து பாராளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்ன? எந்தெந்த விஷயங்கள் மக்களை அவர் அணுகுகிறார்? பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதிகள் எவ்வளவு? அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? என்பது பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள உள்ளார்கள்.
முதல் நாளான இன்று பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அறிமுக வகுப்பு நடைபெற்றது. இதில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாணவர்களை சந்தித்து 30 நாட்கள் என்னென்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி எடுத்துரைத்தார்.
இது குறித்து பேட்டி அளித்த பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக யங் இந்தியன் அமைப்பின் மூலமாக பாராளுமன்ற உறுப்பினருடன் ஒரு மாதம் Internship நடத்துவதாக தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் என்னென்ன பணிகள் செய்கிறார்? அவரது கடமை என்ன என்பது குறித்து என்னுடன் இருந்து அதனை தெரிந்து கொள்வார்கள் என்றார். நான் செல்லும் அலுவலகங்கள் கூட்டங்கள் அனைத்திற்கும் இந்த மாணவர்களும் வருவார்கள் என்றும் தெரிவித்தார்.
பலருக்கும் பாராளுமன்ற உறுப்பினரை பற்றி ஒரு புரிதல் இருக்காது என தெரிவித்த அவர் பாராளுமன்ற உறுப்பினரை என்னென்ன விஷயங்களுக்காக அணுக வேண்டும் என்பது பற்றி இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்றார். இளைய தலைமுறையினர் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் ஆனால் தேர்தல் காலத்தில் ஓட்டு போடுவதற்கு கூட வருவதில்லை என தெரிவித்த அவர் அதையெல்லாம் மாற்றுவதற்காகவும் அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்பது தான் இதன் நோக்கம் என தெரிவித்தார்.
இன்னும் ஓரிரு வருடங்களில் இவர்களும் சமூகத்தில் ஒரு பொறுப்பில் குடிமக்களாக இருப்பார்கள் என்று கூறினார். கிட்டத்தட்ட 180 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அதிலிருந்து 11 பேரை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்பொழுது வந்துள்ள இந்த மாணவர்களுக்கு அன்பு கரங்கள் திட்டம் பற்றி நான் கூறியதை அடுத்து தான் தெரியவந்ததாகவும் தெரிவித்தார்.
18 ஆம் தேதி நடைபெற உள்ள திசா கூட்டத்திற்கு இந்த மாணவர்கள் என்னுடன் கலந்து கொள்வார்கள் என்றும் அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் மாநகர காவல் ஆணையாளர் ஆகியவரை சந்தித்து அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முதல் கட்டமாக பதினோரு மாணவர்களை தேர்வு செய்துள்ளதாகவும் இனிவரும் நாட்களில் அதிகமான மாணவர்கள் வரும்பொழுது அதற்கு தகுந்தார் போல் அவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் திட்டங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கவுன்சிலர்கள் எம்பிக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றியும் அவர்களின் பணிகள் பற்றியும் எல்லாம் அந்த மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பயிற்சி முடிந்தவுடன் டெல்லியில் நடைபெறும் குளிர்கால கூட்ட தொடரின் பொழுது இந்த மாணவர்களை அனுமதி பெற்று அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.