கோவை: கல்வீரன்பாளையம் பகுதியில் போதைக்காக 68 வயது தாயை கட்டையால் தாக்கி மண்டையை உடைத்த மகன் கருப்புசாமியை போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் பந்தல் தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி முருகாத்தாள் (வயது 68). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் இவரது மகன் கருப்பசாமி ( வயது 43) வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்து உள்ளார். செலவுக்கு அடிக்கடி தாயார் முருகாத்தாளிடம் கருப்பசாமி பணம் கேட்டு வருவது வழக்கம்.
முருகாத்தாள் தனது 68 வயதிலும் கடினமான வேலையை பார்த்து குடும்பத்திற்கு சம்பாதித்து வந்தார். இதனையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் முருகாத்தாளிடம் கருப்பசாமி குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று முருகாத்தாள் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி அங்கே கிடந்த கட்டையை எடுத்து முருகாத்தாளை தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த கருப்பசாமி அங்கிருந்து ஓடிவிட்டார்.
அதன் பிறகு முருகாத்தாளை அவரது மகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து முருகாத்தாள் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

