கோவை: ரூ.28.93 கோடி செலவில் கட்டப்பட்ட கரமடை உயர்மட்ட மேம்பாலத்தை ஒரு சில மாதங்களில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை – மேட்டுப்பாளையம் சாலையை நீலகிரிக்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், காரமடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தோளம்பாளையம் மற்றும் கண்ணார்பாளையம் சாலைகள் குறுகியதாக இருப்பதாலும், காரமடை – தோளம்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே கேட் தினமும் 10 முறைக்கு மேல் திறந்து மூடப்படுவதாலும், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கு தவிக்கின்றனர். இதனால் அந்த வழியாக வரும் ஆம்புலன்சுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து பொதுமக்கள் காரமடையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நீண்டநாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைதொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை ரூ.28.93 கோடி மதிப்பில் கரமடையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிட்டது. இதையடுத்து 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணிகள் தொடங்கியன. ஆனால் ரயில்வே துறையின் அனுமதி கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தது. அனுமதி கிடைத்ததை தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்ட பறக்கும் பாலத்தின் முக்கிய கட்டுமானப்பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.
மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தோளம்பாளையம் சாலை சந்திப்புகளில் ரவுண்டான பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. இந்த பணிகளும் விரைவில் தொடங்கப்பட்டு பொங்கலுக்கு முன்பு முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரியில் திறப்பு
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையின் திட்டப்பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “காரமடை பாலம் முழுமையாக முடிந்துவிட்டது. பி.டபிள்யூ.டி. துறை விரைவில் விளக்குகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தோளம்பாளையம் சாலை சந்திப்புகளில் ரவுண்டான பணிகள் முடிந்தவுடன் பாலம் திறக்கப்படும். இதற்கான தனி டெண்டர் விரைவில் விடப்படும். இரு மாதங்களில் பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பாலம் திறக்கப்படும்” என்றனர்.

