கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவில் குளிக்க மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், இன்று கோவையில் மிக கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தாலும், கோவையில் இன்று மிக கனமழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் முன்னறிவிப்பினாலும், குற்றாலத்தில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
அதே நேரத்தில், தீபாவளி விடுமுறைக் காலம் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.




