கோவையில் வழிப்பறி கொள்ளையர்களுக்கு கால் முறைவு!

கோவை: மதுபோதையில் விபத்து ஏற்பட்டு கால்கள் முறிந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்தவர் கவுதம் (29). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துத் தப்பிச் சென்றனர்.

Advertisement

இதுகுறித்து கவுதம் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 2 வாலிபர்கள் மது போதையில் கண்ணப்பன் நகர் மேம்பாலம் பகுதியில் தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயம் அடைந்து வலியால் துடித்துக் கொண்டு இருந்தனர்.

அவர்களை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அந்த வாலிபர்களைப் பரிசோதனை செய்த டாக்டர், இருவருக்கும் வலது கால் முறிந்து இருப்பதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையே விபத்து குறித்து மருத்துவமனை நிர்வாகம் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

ரத்தினபுரி போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். விசாரணையில் அவர்கள் தயிர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்த அம்புரோஸ் (28) மற்றும் ரத்தினபுரி சுப்பாத்தாள் லே அவுட் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் (27) என்பதும், இருவரும் கவுதமிடம் செல்போன் பறித்து தப்பியவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், இருவர் மீதும் ரத்தினபுரி போலீஸ் நிலையம் உட்பட மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அம்புரோஸ் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News