கோவை: கோவையில் தனது குட்டியைக் கவ்விச்சென்ற சிறுத்தையை நாய் விரட்டிச்செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில்,குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் வன விலங்குகளால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு உயிர், பயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் மதுக்கரை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி செல்வதும் அரங்கேறி வருகிறது.
சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டுகளை வைத்தும் கண்காணித்தும் வருகின்றனர். ஆனால் சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்காமல் ‘டிமிக்கி’ காட்டி வருகிறது.
இதனிடையே தொண்டாமுத்தூர்-தாளியூர் சாலையில் உலியம்பாளையம் என்ற பகுதியில் உள்ள சாலையில் ஓரத்தில் நாய்க்குட்டிகள் தூங்கிக் கொண்டிருந்தன.
அப்பகுதியில் உலா வந்த சிறுத்தை அந்த நாய்க்குட்டிகளைப் பிடிக்கச் சென்றது. அதில் ஒரு குட்டி தப்பிய நிலையில், மற்றொரு குட்டியைச் சிறுத்தை கவ்வியது.
இதனால் நாய்க்குட்டி அலறித்துடித்தது. குட்டியின் சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்த தாய் நாய் ஒன்று குரைத்துக் கொண்டு சிறுத்தையின் பின் தொடர்ந்து சென்றது.
இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Athu DTCP potu Daksha Vithu 10 years mela aachu