கோவை: கோவை பிரியாணி கடையில் சிக்கன் குருமாவில் பல்லி இருந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை ஆர்.எஸ் புரம் அருகே வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த மே 27 ம் தேதி சிலர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, அவர்களில் ஒருவர் பிரியாணிக்கு ஊற்றிய சிக்கன் குருமாவில் பல்லி இறந்து கிடப்பதாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து ஒரு நாள் கழித்து பல்லி கிடந்ததாக நடந்த சம்பவம் ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்ற தகவல் ஹோட்டல் உரிமையாளருக்கு கிடைத்ததாக, ஹோட்டல் உரிமையாளர் உமாபதி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இச்சம்பவம் தொடர்பாக
ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.. தொடர்ந்து சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நடைபெறப்போகும் சம்பவத்தை முன் கூட்டியே பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்த நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அண்ணாதுரை, சரவணன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.