கோவை: குழந்தைகள் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டில் கடந்த 37 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிள் டிரஸ்ட் (NMCT), தனது 18வது ஆண்டு ரோஜாக்கூட்டம் தினத்தை சிறப்பாக கொண்டாடியது.
கோவையில் ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்கள், பழங்குடி மற்றும் குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், எச்.ஐ.வி./ஏய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பின் தங்கிய பிரிவினரைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றனர்.

இவர்கள் NMCT-யின் முக்கியமான திட்டமான “ரோஜாக்கூட்டம்” மூலம் பாதுகாக்கப்பட்டு கல்வி மற்றும் வாழ்வியல் திறன்கள் பெற்றுவந்துள்ளனர்.
நிகழ்வு ரோஜாக்கூட்டம் சிறுவர் குழுவைச் சேர்ந்த கலீஸ்வரி வரவேற்புரை மூலம் விழா தொடங்கியது.

நேரு கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் செயலாளர் பி. கிருஷ்ணகுமார் தனது உரையில், NMCT நிறுவனத்தின் நீண்ட கால சமூக நல சேவையை பாராட்டினார்.
NMCT நிறுவனர் மற்றும் நம்பிக்கையுடன் பணியாற்றும் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சங்கரநாராயணன், தனது உரையில், ரோஜாக்கூட்டம் திட்டத்தின் வளர்ச்சி பாதையைப் பகிர்ந்தார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார், கல்வி வாய்ப்பு இல்லாத பின்தங்கிய மக்களுக்கான கல்வியை உறுதி செய்யும் பணியில் NMCT அமைப்பின் பங்களிப்பை பாராட்டினார்.

A.V. குழுமத் தலைவரான ஏ. வி. வரதராஜன் தனது சிறப்புரையிக், இத்தகைய கல்வி முயற்சிகளை ஏற்றுக் கொள்வதில் நிறுவனங்களும், சமூகமும் எவ்வளவு முக்கியம் என்பதைக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாக பள்ளிப் பைகள் மற்றும் நோட்புக்குகள் வழங்கப்பட்டன. இதனுடன் குழந்தைகளின் மேடைப்பாடல்கள், நாட்டுப்புற நடனங்கள், மாற்றத்தைச் சொல்லும் உணர்வூட்டும் கதைகள் போன்ற கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.