Header Top Ad
Header Top Ad

பிரம்மாண்டமாய் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: வீடியோ காட்சிகள்…!

Coimbatore: பேரூர் பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையின் முக்கியமான வழிபாட்டுத்தளங்களுள் ஒன்றாக விளங்குகிறது, நகரின் மேற்கு திசையில் பேரூர் என்ற இடத்தில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயில். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது.

Advertisement

ஸ்தல வரலாறு

பேரூர் என்ற தொன்மையான ஊரில், ஆயிரமாண்டுகளுக்கு முன் சிவபெருமான் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டது பட்டீஸ்வரர் கோயில். இங்கு நடராஜர் ஆடும் நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் சிவபெருமான்.

திருப்பேரூர், மேல சிதம்பரம் என்ற புனைப்பெயர்களையும் கொண்டுள்ளது பேரூர். நொய்யல் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயிலில் அம்மன் பச்சை நாயகியாகக் காட்சி தருகிறார்.

சிறப்புகள்

இவ்வழியாகப் பாயும் நொய்யல் ஆற்றுக்கு காஞ்சிமாநதி என்றும் பெயர் வழங்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் பட்டீஸ்வரர், அம்மன் பச்சை நாயகி. ஸ்தல விருட்சம் புளியமரம் மற்றும் பனை மரம். தொன்மையான இலக்கியங்களில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் சிறப்புகள் பாடப்பட்டுள்ளன.

இக்கோயிலிலுள்ள பிறாவப்புளி என்ற புளியமரத்தின் விதைகளை எங்கு விதைத்தாலும் முளைப்பதில்லை. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழலும் தாமரை, தொங்கும் கல்லால் செய்யப்பட்ட சங்கிலிகள், வலப்பக்கம் 94 அடி நீளம், 38 அடி மற்றும் 36 தூண்கள் கொண்ட அகலம் கொண்ட மண்டபம் என்ற பல்வேறு சிறப்புகளை பட்டீஸ்வரர் கோயில் பெற்றுள்ளது.

பேரூரில் சொர்க்கவாசல் 

சிவன் கோயில்களில் நடனமாடும் நிலையில் உள்ள நடராஜரையே பார்க்க முடியும். ஆனால், இங்கு நடனமாடி முடிக்கும் நிலையில் உள்ள நடராஜரை தரிக்கலாம். ஆண்டுக்கு 10 முறை இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. வழக்கமாக பெருமாள் கோயில்களிலேயே சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் மட்டுமே சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

விழாக்கள்

இக்கோயிலின் முக்கிய திருவிழாவாக திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ தேரோட்டமும் நடைபெறுகிறது. பட்டீஸ்வரர் பச்சை நாயகி அம்மனுடன் இணைந்து நாற்று நடவு செய்ததை நினைத்து வழிபாடு நடத்தும் வகையில், ஆனி மாதத்தில் நாற்று நடவு செய்யும் விழாவும் நடைபெறுகிறது.

அதேபோல், ஆடி மாதம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள படித்துறையில் முன்னோருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இதனிடையே, பிரசித்தியும், வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இக்கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட குடமுழுக்கு

இதற்காக, கடந்தாண்டு செப்டம்பர் மாதமே கோயில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், பரிவார மூர்த்திகளுக்கும்.  ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்குப் பாலாலயம் செய்யப்பட்டது. பிப், 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. அதன் பிறகு பிப், 7ல், யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. நேற்று காலை (பிப்,09ம் தேதி), நான்காம் கால யாக பூஜையும், மாலை 4:15க்கு மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜையும், பேரொளி வழிபாடும் நடைபெற்றது.

தொடர்ந்து, இன்று காலை 5:45 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 9:50க்கு, ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 10:05 மணிக்கு பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் உட்பட தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாலை, 5 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனமும், பேரொளி வழிபாடும், திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Recent News

Latest Articles