Header Top Ad
Header Top Ad

கோவையில் தொடங்கியது பிக்கிள் பால் உலக தரவரிசை போட்டி!

கோவை: கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ் நடத்தும் தமிழகத்தின் முதல் பிக்கிள் பால் உலக தரவரிசைப் போட்டிகள் கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவையின் முதல் பிக்கிள் பால் அணியான ‘கோயம்புத்தூர் சூப்பர் ஸ்மாஷர்ஸ்’ சார்பில் கோயம்புத்தூர் பிக்கிள் பால் ஓபன் போட்டி முதன்முதலாக திருச்சி சாலையில் உள்ள பிக்கிள் பால் கிளப்ஹவுஸில் நடைபெற்று வருகிறது.

இது தமிழகத்தின் முதல் ‘பிக்கிள் பால் உலகத் தரவரிசை (பி.டபிள்யு.ஆர்.) 200’ வகை போட்டியாகும். பி.டபிள்யு.ஆர் 50 வகை போட்டிகள் என்பது கிளப் அளவிலான போட்டிகளையும், பி.டபிள்யு.ஆர்.100வகை போட்டிகள் நுழைவு-நிலை போட்டிகளையும் குறிக்கும்.

அதேபோல், பி.டபிள்யு.ஆர் 200 ரக போட்டிகள் என்பது பிராந்திய அளவில் நடைபெறும் போட்டிகளைக் குறிக்கிறது. இப்போட்டிகளில் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல கிளப்கள் அதிக புள்ளிகளைப் பெறுவதற்காகவும், உயர்ந்த நிலைகளை அடைவதற்காகவும் மோதும்.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் முன்னிலை வகித்தார்.

இப்போட்டிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, திறன் மற்றும் வயது அடிப்படையிலான பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்தியாவில் பிக்கிள் பால் விளையாட்டின் முக்கிய வீரர்களில் சிலரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உள்ளனர்.

Advertisement

சென்னை வீரர்கள் சரவணன், வெங்கடேஷ், ஜெய்ஷ்னு, அனீஷ் மற்றும் விஸ்வஜித், பெங்களூர் வீரர்கள் கௌதம், ரஞ்சித், ஸ்பேடன் மற்றும் ஆதித்யா பிரதீப் ஆகியோருடன், கொல்கத்தாவைச் சேர்ந்த வினய் சேத்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முக்கிய வீரர்களுடன் கோயம்புத்தூரைச் சேர்ந்த பூபதி மற்றும் ரித்திகா ஆகியோரும் இணைந்து களம் காண்கின்றனர்.

மொத்தப் பரிசுத் தொகை ரூ.4 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களும் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இப்போட்டிகளை ஃ பேன்கோட் (FanCode) எனும் OTT தளத்திலும் யூடியூப் (YouTube) தளத்திலும் நேரலையாகவும் காணமுடியும்.

இப்போட்டிகள் இந்திய பிக்கிள் பால் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்தநிலை பிரிவுகளுக்கான பி.டபிள்யு.ஆர். தரவரிசை இணக்கத்தை உறுதி செய்வதற்காக, சங்கத்தின் அதிகாரிகள் இப்போட்டிகளை மேற்பார்வையிடுவார்கள்.

Recent News