கோவை: கோவையில் மாணவி கூட்டு பலாத்காரத்தில் கைதான 3 பேரை காவலில் எடுக்க டாக்டரின் பரிந்துரைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஒண்டிப்புதூரை சேர்ந்த மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் தனது 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரே மொபட்டில் வந்த அந்த வாலிபர்கள் மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் தலையில் வெட்டி தாக்கிவிட்டு மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று மாணவியின் ஆண் நண்பரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு, 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 4ம் தேதி பொது அறுவை சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அப்துல் ரகுமான் 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர்கள் 3 பேரையும் வருகிற 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே 3 பேருக்கும் காலில் குண்டு அடிப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் டாக்டர்கள் பரிந்துரைத்த பின்னரே கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
3 பேரும் சுட்டு பிடிக்கப்பட்டதால் அவர்களுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது அறுவை சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் குணமடையும்வரை டாக்டர்கள் பொது அறுவை சிகிச்சை வார்டில் வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளனர். டாக்டர்கள் தெரிவித்த பின்னர் கைதிகள் வார்டுக்கு உடனடியாக மாற்றப்படுவார்கள்.
அதன் பின்னரே 3 பேரையும் காவலில் எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதை தொடர்ந்து 3 பேரும் சம்பவ நடந்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு நடித்து காட்ட செய்து வீடியோ பதிவு செய்யப்படும், மாணவியிடம் அணிவகுப்பு நடத்தப்படும். முன்னதாக கோர்ட்டில் அமர்பிக்க வேண்டிய மருத்துவ பரிசோதனை அவர்களுக்கு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


