சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்றுவிட்டு வலிப்பு வந்து இறந்ததாக போலீசார் நாடகம் ஆடியது, தற்போது வெளியாகியுள்ள வீடியோவால் அம்பலமாகியுள்ளது.
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை அடுத்த மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரின் உறவினர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அப்போது, அவரது 10 சவரன் தங்க நகைகள் மாயமானது. செல்வாக்கு மிகுந்த நபர் என்பதால் இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement

அஜித்குமார்

அந்த கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் தான் இளைஞர் அஜித்குமார் (வயது 27). முறையான புகார் அளிக்கப்படாத நிலையில், அந்த கோவிலுக்கு வந்த போலீசார் அஜித்குமார் உட்பட, அவரது உறவினர்கள் 5 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின் போது அஜித்குமாரை 2 நாட்களாக வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். “நகைகளை நீதான் திருடினாய் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறி தாக்கியதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனிடையே விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை மீண்டும் கோவில் அருகே உள்ள மாட்டுத் தொழுவத்தில் வைத்து போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அஜித்குமார் படுகாயமடைந்து சோர்வுற்றிருந்தார்.
அப்போது தனக்கு குடிநீர் வேண்டுமென்று தளுதளுத்த குரலில் கேட்க, அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து அவரை வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது அஜித் மயக்கமடைந்துள்ளார்.
உயிரிழப்பு

தொடர்ந்து அவரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
Advertisement

ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது அஜித்குமார் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உரிய விசாரணை வேண்டும் என்று அஜித்தின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனிடையே போலீஸ் எஃப்.ஐ.ஆரில், விசாரணையின் போது அஜித்குமார் ஓட முயன்றார். அப்போது வழுக்கி விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதில் தான் அவர் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கொலையை எப்படியாவது சரிக்கட்டிவிட வேண்டும் என்று அஜித்குமாரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் தருவதாக போலீஸ் மற்றும் ஆளுங்கட்சி தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த குடும்பத்தினர் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வந்தனர்.
அம்பலம்
இதனிடையே, அஜித்குமாரை மாட்டுத் தொழுவத்தில் அமர வைத்து, அவரை போலீசார் பி.வி.சி., பைப் கொண்டு சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியானது.
எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது போல் அஜித் வழுக்கி விழவில்லை என்பதும், அனைத்தும் போலீசாரின் கட்டுக்கதைகள் என்பதும் தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆனது.
அந்த வீடியோ காட்சிகளை இங்கே காணலாம்
தொடர்ந்து கூட்டாக சேர்ந்து, தனி ஆளாக சிக்கிய அஜித்தை அடித்து கொலை செய்த காவலர்கள் சங்கர மணிகண்டன், பிரபு, ராஜா, ஆனந்த், கண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். போலீஸ் எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது:-
சரமாரி கேள்வி
நகை காணாமல் போன வழக்கில் போலீசார் ஏன் உடனே எஃப்.ஐ.ஆர் பதியவில்லை?
யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை சிறப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது?
உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற வேண்டுமென்று உண்மையை மறைக்கக்கூடாது.
சமூக வலைதளங்களில் வந்த தகவலை பார்த்து இரண்டு மணி நேரத்தில் தனிப்படை விசாரணையைத் தொடங்கியதா?
போலீசார் மாமூல் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளன; அவற்றை இரண்டு மணி நேரத்தில் விசாரிப்பீர்களா?
அடிப்பதற்கு நீங்கள் யார்?
அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? யார் கொடுத்த அதிகாரம் இது? புலனாய்வு செய்வதற்கு மட்டுமே காவல்துறைக்கு உரிமை உள்ளது.
முழு உண்மையையும் சொல்ல தமிழக அரசு மறுக்கிறது. சி.சி.டி.வி காட்சிகளிலிருந்து மறைக்க, வெளியிடங்களுக்கு கொண்டு சென்று இளைஞர் அஜித்தை இரண்டு நாட்களாக வேறு வேறு இடங்களுக்கு போலீசார் அடித்துள்ளனர்.
நீதித்துறையையும், காவல்துறையையும் சேர்ந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்தாலும், போலீசார் இப்படித்தான் நடந்து கொள்வார்களா? என்று நீதிமன்றம் அடுக்கடுக்காய் கேள்விகளை எழுப்பியது
மேலும், இந்த வழக்கில் அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அந்த அறிக்கை இன்று பிற்பகல் தாக்கல் செய்யப்பட்டது. இதனைப்பார்த்த நீதிபதிகள், 44 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. காது மூக்கில் ரத்தம் வரும் வரை தாக்கப்பட்டுள்ளார்.
கொன்றுவிட்டீர்கள்

மிளாகாய்த் தூளை முகத்திலும், அந்தரங்க உறுப்புகளிலும் தூவி துன்புறுத்தி உள்ளீர்கள். கல்வியறிவு அதிகமுள்ள தமிழகம் போன்ற மாநிலத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது மிகவும் ஆபத்தானது.
மாநிலம் தனது குடிமகனையே அடித்துக் கொன்றுவிட்டது.
அதிகாரமே இப்படியான மனநிலையை போலீசாருக்கு கொடுத்துள்ளது என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. அதிகாரிகளை காப்பாற்றும் போக்கே தெரிகிறது. இந்த வழக்கை நீர்த்துப் போக செய்ய அரசு முயற்சி எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நீதிமன்றம், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
போலீசாரின் இந்த கொடூர கொலை குறித்து மூத்த பத்திரிகையாளர் நீலகண்டன் கூறுகையில்,
“திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் சிக்குவோர் வழுக்கி விழுந்து கை-கால்கள் முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறும்போது அதனை பல தரப்பட்ட மக்களும் கொண்டாடி வரவேற்றதன் விளைவே இது.
போலீசாரின் அதிகாரம் எந்த அளவுக்கு உட்பட்டது என்பதை மீறி அவர்கள் செயல்படத் தொடங்கியதால் இது போன்ற துஷ்பிரயோகங்கள் தொடர்கின்றன. இளைஞர் உயிரிழந்துவிட்டதால் இந்த ஒரு வழக்கு பூதாகரமாகியுள்ளது.
90 காலகட்டங்களில் அரங்கேற்றப்பட்ட போலீஸ் அதிகாரக் கொடுமைகள், தமிழகத்தில் இன்றும் அரங்கேறி வருவது அவ்வப்போது வெளியாகும் காட்சிகள் மூலம் தெரியவருகிறது.
போலீசாரின் இந்த அத்துமீறல்களை கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. அதிகாரிகள் மீதான இந்த கண்துடைப்பு நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, கடுமையான நடவடிக்கையை எடுக்க அரசு தவறுமேயானால், அரசின் அதிகாரத்தை மக்கள் பிடுங்கி எறிவார்கள் என்பது மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.
#JusticeForAjithkumar
#JusticeForAjithkumar
#justiceForAjithkumar
ஆணவம் பிடித்த காவல் துறையை காப்பாற்ற முயற்சிக்கும் தமிழக அரசு. நாளை ஆட்சி மாற்றம் இதே நிலைமைதான் என்று நினைத்ததால் தான், ஏவல் துறையை காப்பாற்றுகிறது.