கோவையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

கோவை: கோவையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் 2025 வரை முதுமலை புலிகள் காப்பகக் காடுகளில் உள்ள காட்டுப் பன்றிகளில் ASF உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாலும், கேரளாவின் கோட்டயம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பதிவாகியுள்ளதால், இந்நோய் நமது மாவட்டத்தில் பரவாமலிருக்க நோய் தடுப்பு முன்னேற்பாடாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து நுழைவுப் பகுதியிலும் கடுமையான பாதுகாப்பை அமல்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

Advertisement

கேரளாவிலிருந்து பன்றிகளுக்கு தீவனம், தீவனப் பொருட்கள் பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தொடர்புடைய அலுவலர்கள் கண்காணிப்பு மேற்கொண்டு வாகனங்களை சோதனைச் சாவடிகளிலிருந்து திருப்பி அனுப்பிடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பன்றி வளர்ப்பாளர்களிடையே நோய் மற்றும் அதன் பாதகமான விளைவுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், சுகாதாரத்துறை அலுவலர்கள் பன்றி பண்ணைகளில் பன்றிகளை கையாளும் நபர்களை ஆய்வுக்குட்படுத்தி சோதனை மேற்கொள்ளவும், இதர சகோதரத்துறை அலுவலர்கள் கால்நடை பராமரிப்புத்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் ஏற்படாத வகையில் பன்றிப்பண்ணைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் கிளர்ச்சி ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களை கால்நடை பராமரிப்புத்துறையிடம் தெரிந்து கொண்டு பண்ணைகளில் கடுங்கண்காணிப்பு மேற்கொண்டு வழக்கத்திற்கு மாறாக பன்றிகளில் ஏதேனும் விரும்பத்தகாத திடீர் இறப்பு மற்றும் நோய் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்குத் தெரிவிக்க பன்றி பண்ணையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நோய் கிளர்ச்சி ஏற்படும் சமயங்களில் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு தேவையான உபகரணங்கள், தற்காப்பு கவசங்கள், 200 உயிர் காப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 12 சோதனை சாவடிகளில் 36குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் கேரளா மாநிலத்திற்கு பன்றிகளுக்கான தீவனம், தீவனப் பொருட்கள் பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு திரும்பி வரும்பொழுது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவதோடு வாகனங்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 20 அதி விரைவு குழுக்கள் (ஒவ்வொரு குழுவிலும் தலா 4 நபர்கள்) அமைக்கப்பட்டு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்படாமல் நிலைமையை முழுமையாக சமாளிக்கும்பொருட்டு, தயாராக உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Recent News