கோவை: முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு 1.50 கோடி செலவாகும் என்பதால் உதவி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் அஜய் சில்வெஸ்டர். இவரது மனைவி சரண்யா. ஐ.டி ஊழியர். இந்த தம்பதியின் குழந்தை லியோனல் தாமஸ்(2). இந்த ஆண் குழந்தைக்கு மரபணு குறைபாடு காரணமாக முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டது. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
இந்த குழந்தைக்கு ஜீன் தெரபி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதற்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும் என்பதால் மருத்துவ உதவி கோரி கோவை கலெக்டரிடம் இன்று மனு அளித்தனர்.
அதன் பின்னர் அவர்கள் கூறியதாவது, குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து அதன் வளர்ச்சியில் சில மாற்றங்கள் தெரிந்தது. இதன் பின்பு நாங்கள் பல்வேறு மருத்துவர்களிடம் காண்பித்தோம். குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகும்போது தான் முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் குறைபாடு இருப்பது தெரிய வந்தது.
குழந்தைகள் நேராக உட்கார முடியாது, நடக்க முடியாது. இதனால் சரியாக மூச்சு விட முடியாது. பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காண்பித்த போது ஜீன் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கு ரூ. 16 கோடி செலவாகும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் வரி விலக்கு போக 8 1/2 கோடி ரூபாய் செலவாகும் என்றனர். அதன் பின்னர் மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனை ரூ. ஒன்றரை கோடிக்கு ஜீன் தெரபி சிகிச்சை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே எங்களுக்கு இந்த தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால் அரசு மூலம் நிதி உதவி பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். தங்களை 7397504777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

