கோவை: கோவையில் வீட்டில் வைத்திருந்த ரூ.40 லட்சம் மாயமானது தொடர்பாக வேலைக்கார பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கலாவதி (43). கார்த்திகேயன் கடந்த 2017ம் ஆண்டு இறந்து விட்டார். இதன் காரணமாக சமீபத்தில் கலாவதிக்கு இன்சூரன்ஸ் பணம் ரூ.12 லட்சம் கிடைத்தது.
இதனிடையே புதிய வீடு வாங்க விரும்பிய கலாவதி தனது வீட்டை விற்று அதில் வந்த பணம் உட்பட மொத்தம் ரூ.40 லட்சத்தை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் வைத்திருந்தார்.
இந்நிலையில், புதிய வீடு வாங்க பணம் கொடுப்பதற்காக பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.40 லட்சத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கலாவதி சந்தேகத்தில் தனது வீட்டில் வேலை பார்க்கும் செல்வபுரத்தை சேர்ந்த 28 வயது பெண்ணிடம் விசாரித்தார்.
ஆனால், பணம் திருடு போனது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பணம் திருடிய நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.