கோவை: நள்ளிரவில் பார்ட்டி கொண்டாடி விட்டு பிறந்தநாளில் கார் டிரைவர் தவறான முடிவெடுத்த சம்பவம் நண்பர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர் முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (29). கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஹரிஹரசுதனின் பெற்றோர் உடல்நிலை குறைவால் இறந்து விட்டனர். அதன் பின்னர் ஹரிஹரசுதன் கோவை வந்து ஆர். எஸ். புரம் மேட்டுப்பாளையம் ரோட்டில் ராமசாமி வீதியில் நண்பர்களுடன் தங்கி இருந்து கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹரிஹரசுதனுக்கு பிறந்தநாள் வந்தது. இதனால் தனது நண்பர் செல்வகுமார் என்பவருடன் நள்ளிரவு, ஹரிஹரசுதன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். இரவில் இருவரும் மது குடித்துவிட்டு, அவரவர் அறைக்கு தூங்க சென்று விட்டனர்.
மறுநாள் காலை ஹரிஹரசுதனை பார்க்க செல்வகுமார் அவர் அறைக்கு சென்றார். அப்போது அங்கு ஹரிஹரசுதன் பெல்ட்டை பயன்படுத்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே செல்வகுமார், மதுக்கரையில் உள்ள ஹரிஹரசுதனின் உறவினர் மீனாட்சி சுந்தரத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அவர் ஆர். எஸ் .புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஹரிஹரசுதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

