கோவை: கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி முழு ஆண்டு தேர்வுகள் முடிந்த பின்னர் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
தொடர்ந்து ஜூன் 2ம் தேதி தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனிடையே பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளிப் போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது. திட்டமிட்டபடியே ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
கோவையைப் பொறுத்த வரையில் பள்ளி கல்லூரிகள் அதிகம் உள்ள நகரம் என்பதால் இங்கு உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாது, வெளி மாவட்ட மாணவர்களும் வந்து தங்கி பயின்று வருகின்றனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் சென்ற மாணவர்கள் தற்போது கோவைக்கு திரும்பி வருகின்றனர்.
இதனால் கோவையில் உள்ள மத்திய ரயில் நிலையம், வடகோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள. நிலையில், போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.