கோவை மக்களுக்காக தற்காப்பு பயிற்சி: அழைக்கிறது தீயணைப்புத்துறை!

கோவை: தீ விபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுதல், மீட்புப் பணிகள் மற்றும் முதலுதவி தொடர்பாக பொதுமக்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள், போன்றவைகளிலிருந்தும் பொதுமக்களை பாதுகாத்து வருகிறது.

இந்த நிலையில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்காப்புப் பயிற்சி

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:-

பேரழிவை ஏற்படுத்தும் தீயில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் தீயணைப்பு துறை சார்பில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 13 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் 2 நாட்கள் விழிப்புணர்வு வகுப்புகள் நாளை, நாளை மறுநாள் நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணி, பகல் 12 மணி, மாலை 4 மணி என 3 வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு வகுப்பும் 1 மணி நேரம் நடத்தப்படும்.

இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். பங்கேற்கும் பொதுமக்களுக்கு தீயில் இருந்து தங்களைத் தற்காத்து கொள்வது எப்படி, தீ அணைப்பது, தீக்காயம் அடைந்தவர்களை மீட்பது மற்றும் முதலுதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp