கோவை: அ.தி.மு.க – தி.மு.க என இரண்டு கட்சிகளும் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை மறந்து விட்டதால் தான் அதிமுகவில் இருந்து வெளியேறியதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் த.வெ.க மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அ.தி.மு.க – த.வெ.க வை விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு அரசியலில் பலமுனை தாக்குதல் வெற்றிக்கான அறிகுறி என்றும் எதிர்கட்சி புதிய இயக்கத்தை விமர்சிப்பது வரலாற்றில் இல்லாத ஒன்று என தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஒன்று புதிய இயக்கத்தை விமர்சிப்பது அரசியல் நடைமுறையில் இல்லாத ஒன்று என்றாலும், இது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய காலத்திலும் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்ததாக நினைவூட்டிய செங்கோட்டையன், அவர் உயிருள்ளவரை முதல்வராக இருந்தார் அதுதான் வரலாறு என்றார்.
டி.டி.வி தினகரன் குறித்து பேசிய அவர், எங்களுடன் வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு நிலைப்பாடு எடுப்பார்கள் அவர் தற்போது ஒரு முடிவை எடுத்து உள்ளார். அவர் எங்கு சென்றாலும் வாழ்க என்றார்.
ஓ.பி.எஸ். கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், நான் ஒவ்வொரு இடத்திலும் பேசியதை சொன்னால் டெல்லியில் இருந்து உடனே வந்து விடுகிறார்கள். எங்கள் பிரச்சனை எங்களுக்கே தெரியும், சொல்லாமல் இருப்பதே நல்லது என்றார்.
தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால் அவற்றை நிரூபிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்தார். புரட்சி தலைவர், புரட்சி தலைவியுடன் பயணித்து ஆட்சியில் பங்கு கொண்டவன் நான் என கூறிய அவர் என் மீது முன் வைக்கப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் வரை தீர்ப்புகள் வந்து உள்ளன என்றும் தெரிவித்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது வழக்குகள் தொடரப்பட்டதாகவும், தன் தூய்மையை உயர்நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்து உள்ளதாகவும் கூறினார்.
அண்ணாவை மறந்து விட்டதாக விஜய் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்,
இரண்டு கட்சிகளுமே அண்ணாவை மறந்து விட்டது ,என்றும் அம்மாவையும், தலைவர்களையும் மறந்துவிட்டனர் அதனால் தான் நான் வெளியே வந்தேன் என்றார். என் பாக்கெட்டில் இன்னும் அவர்களின் படம் உள்ளது. வளர்த்து விட்டவர்களை மறக்கக் கூடாது மேலும் தகைவர்களை மறைத்து விட்டு ஒருவரை வளர்த்துவிட முடியாது என்றார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.வெ.க உடன் பேசியதாக வந்த செய்தி குறித்த கேள்விக்கு நல்லது நடக்கட்டும் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

