கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர்.
விமான நிலையத்தின் பின்புறம் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூவரைப் பிடிக்க கோவை மாநகர போலீசார் 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. மதுபோதையில் இதுபோன்ற கொடூரத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இன்று அங்கு நாம் தமிழர் கட்சியினர் சென்றனர்.
மேலும், அங்கு விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது மற்றும் குளிர்பான பாட்டில்கள், சேர்களை அடித்து உடைத்து துவம்சம் செய்தனர்.

இந்த பார் பல நாட்களாக சட்ட விரோதமாக இயங்கி வருவதாகவும், இங்கு வரும் ‘குடி’மகன்களால் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியினர் தொண்டர்களால் தொல்லை முடிவுக்கு வந்துள்ளது.
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை அடித்து உடைத்த நாம் தமிழர் கட்சியினர்.



