கோவை: ஆரோக்கியமான இந்தியாவால் தான் விக்சித் பாரத் எனும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என குடியரசு துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் SNR சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 25வது ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இலச்சினை வெளியிட்டார். மேலும் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
இதில் சிறப்புரையாற்றிய குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், மருத்துவத் துறையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறந்த சேவைகளை செய்து வருவதாகவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக medical tourism என்பதை அறிமுகப்படுத்தியதோடு அதில் சாதனை படைத்த பெருமையும் இந்த மருத்துவமனைக்கு உண்டு என குறிப்பிட்டார்.

எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு உணர்வும் அவசியம் எனக் குறிப்பிட்டவர், அந்த வகையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சேவை மனப்பான்மையோடு செயலாற்றி வருவதாகவும், நூறாண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக செயல் புரிய வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
1970 ஆம் ஆண்டு 18 ஏக்கர் பரப்பளவில் அனைவருக்கும் தரமான மருத்துவம், குறிப்பாக ஏழைகளுக்கு தரமான மருத்துவம் என்கிற அடிப்படையில் எஸ் என் ஆர் அறக்கட்டளை சார்பாக துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை, இன்றைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள், 16 மேற்பட்ட ஆப்ரேஷன் தியேட்டர்கள், நவீன ஐ சி யு கருவிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணத்துவம் ஆகியவற்றோடு சிறந்த வகையில் மக்கள் சேவை செய்து வருகிறது.
1990களில் கோவைக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் அறிமுகம் செய்தது, சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை அறிமுகம் செய்தது, அப்துல் கலாம் அவர்களால் நவீன புற்றுநோய் சிகிச்சை வளாகம் துவங்கப்பட்டது என பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள மருத்துவமனை மேலும் புதிய சாதனைகளை செய்ய வேண்டும். குறிப்பாக 8 மணி நேரத்தில் 13,206 உறுப்பு தானத்திற்கு ஒப்புதல் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது இவர்களின் சேவை மனப்பான்மையை காட்டுகிறது என்றார்.
மேலும் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாக பல்வேறு சேவை நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் எந்த ஒரு மருத்துவமனை நிறுவனத்திற்கும் இரண்டு பொறுப்புகள் உள்ளன என்றார். நோயாளியை குணப்படுத்துவது மற்றும் மருத்துவர்களை உருவாக்குவது. இந்த இரண்டிலும் இந்நிறுவனம்
வெற்றி முத்திரையை பதித்துள்ளது என்றார்.
மத்திய மாநில அரசின் திட்டங்கள் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படுகின்றன, குறிப்பாக ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகள் மற்றும் அனைத்து அரசு திட்டங்களும் வெற்றிகரமாக மக்களை சென்றடைய அனைவரின் ஒத்துழைப்பும் முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியம். அந்த வகையில் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதில் மருத்துவமனை நிர்வாகம் சிறந்த சேவையை செய்து வருகிறது என தெரிவித்தார்.
ஆரோக்கியமான குடிமகனால்தான் தேசத்தின் வளர்ச்சியில் குழு பங்கு வகிக்க முடியும், அந்த வகையில் நோய்க்கான காரணத்தை அறிந்து அதனை சரி செய்வதிலும், திருமூலர் கூறியது போல பரம்பொருளிடம் உயிரை கொண்டு சேர்க்க ஆரோக்கியமான உடம்பு அவசியம் என்கிற கருத்துக்களுக்கு இந்த மருத்துவமனை செயல் வடிவம் கொடுக்கிறது.
கோயம்புத்தூர் மாநகரில் சிறந்த சிகிச்சை அளித்து வரும் இந்நிறுவனம், மேலும் விஞ்ஞான வளர்ச்சி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன், ஆரோக்கியமான இந்தியாவால் தான் விக்சித் பாரத் எனும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் SNR சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மேலும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், அறங்காவலர் ராமகிருஷ்ணா உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் வந்ததும் நிகழ்ச்சியின் துவக்கமாக முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது பின்னர் தமிழ்தாய் வாழ்த்து பாடப்படாத நிலையில் குடியரசு துணை தலைவர் தமிழ்தாய் வாழ்த்து பாடுவதற்கு அறிவுறுத்தினார் பின்னர் தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ்தாய் வாழ்த்தினை நினைவூட்டிய துணை குடியரசு தலைவருக்கு நன்றி அய்யா….