தேர்தலில் போட்டியிட எஸ்.பி.வேலுமணி விருப்ப மனு!

கோவை: தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதனிடையே, அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப மனுக்களை கட்சி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ். கடந்த வாரம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் தங்களது விருப்ப மனுக்களை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாஜக, எஸ்.பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

ஆனால், வெளியான அந்த தகவலில் எந்தவிதமான உண்மையும் இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான தனது விருப்ப மனுவை, இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில் எஸ்.பி. வேலுமணி சமர்ப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நல்லாசியுடன், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் அரியணை ஏறவுள்ள கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் நல்ல ஆதரவுடன், கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை எம்.ஜி.ஆர். மாளிகையில் அளித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ காட்சிகள்

Recent News

Video

Join WhatsApp