சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக கரும்பு விலையை உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்சியரிடமும், சென்னை தலைமைச் செயலகத்திலும் விவசாயிகள் மனு அளித்திருந்தனர்.
இதனிடடையே 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 349 ரூபாய் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூபாய் 297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சிறப்பு ஊக்கத் தொகையால் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு ஊக்க தொகையாக 4,79,030 விவசாயிகளுக்கு ரூபாய் 848.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.