கோவை: சுண்டக்காமுத்தூர் அருகே விதிமீறி குப்பை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு கால்நடைகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சுண்டக்காமுத்தூர் அருகே மேற்கு புறவழிச்சாலை பகுதியில் விதிகளுக்கு புறம்பாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் குவியும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன், மண் மற்றும் நீர் வளமும் மாசடைந்து வருகிறது.
மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் இந்தக் குப்பைகளை உண்பதால் நோய்தொற்று ஏற்பட்டு, கால்நடைகள் வளர்ப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பைகளை உண்ணும் கால்நடைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த பகுதியில் விதிமீறி குப்பை கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில காலம் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
கடும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியை கடந்து செல்வதே சிரமமாக உள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, குப்பை கொட்டுவதை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

