கோவை: கடந்த 9ம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த உலக புத்தொழில் மாநாடு குறித்து தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 43 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், மத்திய அரசின் 10 துறைகள், மாநில அரசின் 15 துறைகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற முதலமைச்சரின் கனவை நனவாக்கும் வகையில் கோவையில் நடைபெற்ற புத்தொழில் மாநாடு அமைந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த புத்தொழில் மாநாடு மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
கோவை உலக புத்தொழில் மாநாட்டில் 45 நாடுகளைச் சேர்ந்த 115 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். இந்த மாநாடு மூலமாக 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, அதன் மூலம் ரூ.127 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
2030ல் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்,
என்று தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.


