கோவை: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மருதமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்றைய தினம் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்துm, பாதயாத்திரை சென்றும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி கோவையிலும் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில், அனுவாவி சுப்பிரமணியர் கோவில், காந்தி பார்க் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
குறிப்பாக மருதமலை முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதல் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் பலரும் காவடி எடுத்து அவர்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.
அதிகாலை ஆறு மணிக்கு மருதமலையில் நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனைக் காண வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதே சமயம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வண்ணம் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், மருதமலை முருகன் கோவிலில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்காக குடிநீர் வசதி கழிவறை வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளது நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் மருத்துவ தேவைக்காக மருத்துவ வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், இன்றைய தினம் நடைபெறும் தைப்பூச திருவிழா நிகழ்ச்சியை காண்பதற்கும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்கும் தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வருகை புரிய உள்ளார்.

