கோவை: கவுண்டம்பாளையத்தில் சரக்கு வாகனம், தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
கோவையில் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது பின்னால் வந்த தனியார் நகர பேருந்து மோதியதில் இரும்பு கம்பிகள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து கொண்டு பேருந்துக்குள் சிக்கியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை மாநகர் கவுண்டம்பாளையம் பகுதியில் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு பொலேரோ சரக்கு வாகனம் வந்துள்ளது. மேம்பாலத்திற்கு அடியில் சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த தனியார் நகரப் பேருந்து வேகமாக சரக்கு வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் சரக்கு வாகனத்தில் மேலே வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் பேருந்தின் முன்புற கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சிக்கியது.
இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பேருந்தின் ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கும் பலத்த காயங்கள் ஏற்படாமல் தப்பினர். இருப்பினும் சரக்கு வாகனம் மற்றும் பேருந்து சேதமடைந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் சரக்கு வாகனம் மெதுவாக முன்னே எடுக்கப்பட்ட நிலையில் பேருந்தில் சிக்கி இருந்த இரும்பு கம்பிகள் வெளியேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

